மற்றவர்களுக்கு எளிதாக கிட்டும் வெற்றி, சிலருக்கு மிகவும் அவசியமானதாக இருக்கிறது. ஆனால், வலிமிகுந்த நீண்ட போராட்டத்திற்கு பின்னும் வினேஷ் போகத்திற்கு அந்த வெற்றி சாத்தியமாகவில்லை. வினேஷின் ஒலிம்பிக் தங்கப்பதக்கக் கனவும் தகர்ந்திருந்திருக்கிறது.
மல்யுத்தத்திற்கு பிரசித்திப் பெற்ற ஹரியானாவில் பலாலி என்ற சிறு கிராமத்தில் பிறந்தவர் வினேஷ் போகத். இவர் குழந்தையாக இருக்கும்போதே, சொத்து தகராறில் தந்தை ராஜ்பால் சிங் கொல்லப்பட்டார். இதனால் வினேஷையும் அவரது சகோதரி பிரியங்காவையும் வளர்த்தவர் பெரியப்பாவான மஹாவீர் சிங். கட்டுக்கோப்பான கிராமத்தில் பெண்களை மல்யுத்தத்திற்கு பழக்குவது சாதாரணமானதல்ல.
பபிதா, ரீத்து, சங்கீதா என தனது மகள்களை மல்யுத்தத்திற்கு பழக்கியவர், தனது சகோதரர் மகள்களாக பிரியங்கா மற்றும் வினேஷையும் மல்யுத்தத்தில் களமிறக்கினார்.
ஒரு கிராமத்தின் சூழலில் இப்பெண்களை சர்வதேச மல்யுத்த களங்களில் போராட வைத்து பதக்கங்களை குவிக்க வைத்த மஹாவீருக்கு 2016-ஆம் ஆண்டு, துரோணாச்சாரியார் விருது கொடுத்தது மத்திய அரசு.
இவரின் கதையே அமீர்கான் நடிப்பில் தங்கல் திரைப்படமாக வெளியாகி அனைத்து மொழிகளிலும் பிரபலமானது. இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் எத்தகைய சூழலில் இப்பெண்களை மல்யுத்த புலிகளாக மஹாவீர் உருவாக்கினார் என்று. கடினமான உடல் உழைப்பு கொண்ட மல்யுத்தத்தை பயிற்சி செய்வது ஒருபுறம் எனில், தந்தை இல்லாத சூழலில், கடுமையான மனநெருக்கடியில் வளர்ந்த வினேஷிற்கு சாதிக்கும் வேட்கை அதிகம் இருந்தது.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 3 தங்கம், ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒரு தங்கம் உட்பட 2 பதக்கங்கள். ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் ஒரு தங்கம் உட்பட 4 பதக்கங்கள் என வெற்றிகளை வசமாக்கிய வினேஷிற்கு ஒலிம்பிக் பதக்கம் கனவாகவே இருந்தது. 2016, 2020 ஒலிம்பிக் போட்டிகளில் அவரின் பதக்கக் கனவுகள் கைவசமாகவில்லை.
போட்டிகளுக்கு மத்தியில் அவர் சமூக கட்டமைப்புகளோடும், அரசியல் ரீதியாகவும் போராட வேண்டியிருந்தது. முதலில் கிராம அளவில் பயிற்சிகளின்போதே தொடங்கிய வினேஷின் சவால்கள் தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடியபோதும் தொடர்ந்தன.
பாலியல் புகாருக்கு ஆளான இந்திய மல்யுத்த கூட்டமைப்புத் தலைவரான பிரிஜ் பூஷணை எதிர்த்து போராட வைத்ததால் அரசியல் அடையாளங்களுக்கு ஆளாக நேரிட்டு அதன் காரணமாகவே சமூக வலைதளங்களில் விமர்சனங்களுக்கு ஆளானர்.
இந்த போராட்டம் அரசியல் ரீதியாக மாறியபோதும், தங்கள் குறிக்கோளில் திடமாக நின்று சக மல்யுத்த வீரர், வீராங்கனைகளோடு வினேஷூம் போராடினார். ஆளும் அரசின் அங்கமான எம்பி பிரிஜ் பூஷணை எதிர்த்து உறுதியாக போராடினார். அதன்பிறகு வினேஷை காயங்கள் துரத்தின.பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியுமா என்ற கேள்வியின் முன் போராடினார். வழக்கமாக 53 கிலோ எடைபிரிவில் போட்டியிடும் வினேஷ், தனது இயல்பான எடையை குறைத்து 50 கிலோ பிரிவில் பாரிஸ் ஒலிம்பிக்கில் போட்டியிட்டார்.
அதுவே அவருக்கு சவாலானதாக இருந்தது. இப்போது அதுவே அவருக்கு பிரச்னைக்குரியதாக மாறி தங்கப்பதக்கக் கனவை தகர்த்தெறிந்திருக்கிறது. இன்னும் வினேஷிற்கு சவால்கள் காத்திருக்கின்றன.
போராட்டங்கள் மிச்சமிருக்கின்றன. அவரின் பாரிஸ் ஒலிம்பிக் பதக்கம், இத்தனை நாள் வலிகளுக்கு மருந்தாக இருக்கும் என்று நம்பிய நிலையில், 100 கிராம் எடையில் பதக்கத்தை இழந்திருக்கிறார்.மல்யுத்த களங்களில் பதக்கங்களை வாரிக்குவித்த இந்த வீராங்கனை சமூகத்தை எதிர்த்தும், அரசியல் கட்டமைப்புகளை எதிர்த்தபோதும்தான் வீழ்ந்திருக்கிறார். இப்போது அவர் வீழ்ந்தது சில கிராம்களில் என்றாலும், மக்கள் மனங்களில் நின்றுவிட்டார்.