பிரம்மாண்டமான படேல் சிலையின் சிறப்பு என்ன ?

பிரம்மாண்டமான படேல் சிலையின் சிறப்பு என்ன ?
பிரம்மாண்டமான படேல் சிலையின் சிறப்பு என்ன ?
Published on

உலகின் மிக உயரமான சிலையாக உருவாக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலையை இன்று திறந்து வைக்கப்படவுள்ளது. ஆச்சரியங்கள் நிறைந்த இந்த சிலையில் உள்ள சிறப்பு என்ன என்பதை பார்க்கலாம்.

குஜராத் மாநிலம் வதோதரா அருகே சர்தார் சரோவர் அணையில் இருந்து 3 புள்ளி 2 கிலோ மீட்டர் தூரத்தில் 12 சதுர கிலோ மீட்டர் சுற்றளவில் செயற்கையாக அமைக்கப்பட்ட சாது பெட் என்ற தீவில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை உலகில் இருக்கும் உயரமான சிலை சீனாவில் உள்ள புத்தர் சிலை தான். அதன் உயரம் 419 அடி. இனிமேல் உலகிலேயே மிக உயரமான பிரம்மாண்டமான சிலை என்றால், அது சுதந்திரப் போராட்ட வீரர், இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் சிலை தான். 

ஒற்றுமையின் சிலை என்று பெயரிடப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலையின் மொத்த உயரம் 787 அடி.சிலை அமைந்துள்ள பீடத்தின் உயரம் மட்டும் 190 அடி. கால் பகுதியில் இருந்து தலை வரை உள்ள சிலையின் உயரம் 597 அடி. அதாவது கன்னிகுமரியில் கடலில் கம்பீரமாக இருக்கும் திருவள்ளுவரின் சிலையே 133 அடி என்றால் இதன் பிரமாண்டம் என்ன என்பதை உணர முடியும். இந்த படேல் சிலையின் தயாரிப்பிற்கு 70,000 டன் சிமென்ட், 18,500 டன் இரும்பு, 1,700 டன் பித்தளை பயன்படுத்தப்பட்டு இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. சிலையின் உள்பகுதி காங்கிரீட் கலவையிலான கட்டுமானம் கொண்டது. சிலையின் வெளிப்பகுதி பித்தளை தகடுகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிலையின் உள்பகுதி வழியாக மேலே செல்வதற்கு இரண்டு லிப்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 2 லிப்டுகள் மூலம் ஒவ்வொன்றிலும் ஒரே நேரத்தில் தலா 40 பேர் வரை செல்ல முடியும். சுமார் 220 கிமீ வேக காற்றையும், 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தையும் தாங்கும் வகையில் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் சிலையின் மார்பு பகுதியில், அதாவது 501 அடி உயரத்தில் பார்வையாளர் மாடம் அமைக்கபட்டுள்ளது. அந்த 501 அடி உயரத்தில் 200 பேர் வரை நின்று இயற்கைக் காட்சிகளை கண்டு ரசிக்கலாம். சிலையின் அடித்தளம் 20,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. இந்த அடித்தளத்தில் 52 அறைகள் கொண்ட 3 நட்சத்திர ஓட்டல்கள் உள்ளன. மேலும் அடித்தளத்தில் கண்காட்சி அரங்கம், நினைவுப் பூங்கா, உணவுக் கூடங்கள் என பல அமைக்கப்படுகின்றன. விண்ணை முட்டும் அளவில் காட்சியளிக்கும் இந்த சிலையின் மொத்த செலவு சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.

ஒற்றுமையின் சிலை என்று பெயரிடப்பட்டுள்ள படேல் சிலை, உலகிலேயே மிக உயரமானதாக ஆகும். பல ஆச்சரியங்கள் நிறைந்த படேலின் சிலை தற்போது சிகரமாக காட்சியளிக்கிறது. இனிமேல் உலகிலேயே மிக உயரமான பிரம்மாண்டமான சிலையை பார்க்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இங்கு படையெடுப்பர் என்பதில் சந்தேகம் இல்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com