மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பழமையான ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பெண் பயிற்சி மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்டார்.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்தில், நீதி கேட்டு மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். ஆர்.ஜி.கர் மருத்துவமனை வளாகத்தில் இரவு போராட்டம் நடத்திய மாணவர்களை காவல்துறையினர் அடித்து வெளியேற்றினர்.
இதனிடையே, மருத்துவமனையின் ஜன்னல் கண்ணாடிகள் உள்ளிட்டவை உடைக்கப்பட்டன. இதேபோல் அசன்சோல் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமானோர், செல்போன் டார்ச் அடித்து முழக்கம் எழுப்பினர். சிலிகுரியில், ஆள் உயர தீப்பந்தம் ஏந்தி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெற்றோரை சமாதானப்படுத்தும் முயற்சியில் இருக்கும்போது, தேவையற்ற வதந்திகள் பரபரப்படுவதாக காவல் ஆணையாளர் குற்றம்சாட்டினார்.
78 வது சுதந்திரம் கொண்டாடும் நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.