டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்ற கட்டுமான பணிகளில் பாரத பிரதமர் தங்குவதற்கான புதிய குடியிருப்பு கட்டிடமும் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு பசுமை தீர்ப்பாயமும் அனுமதி கொடுத்துள்ள நிலையில் வரும் 20221 டிசம்பருக்குள் பிரதமரின் புதிய குடியிருப்பு கட்டப்பட வேண்டும் என மத்திய அரசு தரபபில் கெடு தேதி கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சுமார் 64500 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. கிட்டத்தட்ட 13450 கோடி ரூபாய் இந்த கட்டுமான பணிகளுக்கான செலவு இருக்கும் என தெரிகிறது. சென்ட்ரல் விஸ்டா புராஜக்ட் என்ற திட்டத்தின் கீழ் இந்த கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
வரும் 2022 டிசம்பர் மாதம் முதற்கட்டமாக கட்டி முடிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ள கட்டிடங்களில் பிரதமரின் புதிய குடியிருப்பும் வருகிறது. அத்தியாவசிய சேவையின் கீழ் இந்த திட்டம் இயங்கி வருவதால் கொரோனா தொற்று பரவலினால் ஊரடங்கு நடைமுறை அமலில் இருந்தாலும் இந்த கட்டுமான பணிகளுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவை எதிர்க்கட்சியினர் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் சிலர் விமர்சித்து வருகின்றனர்.
“சென்ட்ரல் விஸ்டா அவசியமில்லை. ஒரு தெளிவான தொலைநோக்கு பார்வை கொண்ட மத்திய அரசு தான் அத்தியாவசியம்” என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடந்த வாரம் ட்வீட் செய்திருந்தார்.
தற்போது பிரதமரின் குடியிருப்பு பகுதி ‘7, லோக் கல்யாண் மார்க்’ என உள்ளது. இதற்கு முன்னதாக ரேஸ் கோர்ஸ் சாலையில் பிரதமரின் குடியிருப்பு இருந்தது.