லண்டனில் இருந்து மும்பை நோக்கி வந்த ஏர் இந்தியா விமானத்தில் புகைப்பிடித்த 37 வயது நபர் மீது மும்பை போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடுவானில் விமானத்தில் புகைப்பிடிப்பதும், சிறுநீர் கழிப்பதும், விமான கதவை திறப்பதுமான புகார்கள் கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் கடந்த மார்ச் 4ஆம் தேதி, கொல்கத்தா-புது டெல்லி ஏர் இந்தியா விமானத்தின் கழிவறைக்குள் ஒரு பயணி புகைப்பிடித்தபோது பிடிபட்டார்.
அந்த நபர் கழிவறைக்குள் சென்று சிகரெட்டைப் பற்றவைத்த போது, அலாரம் அடிக்கப்பட்டு ஊழியர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டனர். பின்னர் தரையிறங்கியதும் அந்த பயணி பெயர் அனில் மீனா என்பது தெரியவந்த நிலையில், அவர் டெல்லி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இது நடைபெற்று ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், மார்ச் 11ஆம் தேதியான நேற்று லண்டனில் இருந்து மும்பை வந்த ஏர் இந்தியா விமானத்தில் மற்றொரு சம்பவம், மற்றொரு பயணியால் நடந்துள்ளது. விமானங்களில் புகைப்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அந்தத் தடையை மீறி ரமாகாந்த் என்ற விமான பயணி கழிப்பறையில் புகைப்பிடித்தார் என ஏர் இந்தியா விமானத்தில் உடன் பயணித்த பயணிகளால் புகார் தெரிவிக்கப்பட்டது.
மேலும் குடிபோதையில் இருந்த ரமாகாந்த் விமான கதவை திறக்க முயற்சி செய்ததாகவும், தனது பையில் ஏதோ மருந்து இருக்கின்றது என பேசி ரமாகாந்த் விமானத்தில் பீதியை உண்டாக்கியதாகவும் ஏர் இந்தியா ஊழியர்கள் போலீசாருக்கு புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அந்த பயணிக்கு 37 வயது என்பதும், அவர் ஒரு அமெரிக்க குடிமகன் என்பதும் தெரியவந்துள்ளது.
\
பின்னர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய போது அவரது பையில் அப்படி எந்த மருந்தும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. மும்பை சாகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ராமகாந்த் குடிபோதையில்தான் இப்படி நடந்து கொண்டாரா இல்லை ஏதேனும் மன உளைச்சலில் உள்ளாரா என்பதை தெரிந்துகொள்ள, அவரது ரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.