தகவல் பாதுகாப்பு மற்றும் தனிமனித தகவல் தொடர்பாக ட்விட்டர் நிறுவன அதிகாரிகளிடம் நாடாளுமன்ற நிலைக்குழு கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியது. இந்தியாவில் ட்விட்டர் நிறுவனம், பயனாளர்களின் தகவல் பாதுகாப்பில் அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்த நிலையில், அந்நிறுவன அதிகாரிகளுக்கு அழைப்பாணை அனுப்பி தகவல் தொழில்நுட்பத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு விசாரணை நடத்தியது.
சசிதரூர் தலைமையிலான குழு நடத்திய இந்த விசாரணையில் பங்கேற்ற ட்விட்டர் நிறுவன அதிகாரிகள், தகவல் பாதுகாப்பு விதிமீறல் ஏதும் நடைபெறவில்லை என மறுத்தனர். கவனத்தைக் கவரவும், நிறுவனத்தின் நற்பெயரை கெடுக்கவும் இதுபோன்ற புகார்கள் அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். எனினும், பயனர்களின் தகவல் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையில் சமரசம் செய்யக்கூடாது என நாடாளுமன்றக் நிலைக்குழு ட்விட்டர் அதிகாரிகளிடம் அறிவுறுத்தியது.