'பாபர் மசூதிக்கு கீழே உள்ள கோயிலைக் கண்டுபிடித்தவர்' என்று அறியப்படும் பிரஜ் பாசி லால்க்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தக் குடியரசு தினத்தில் பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டவர்களின் இவரும் ஒருவர். அவர் யார்... என்ன செய்தார் என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.
1970களின் மத்தியில் ராம்ஜென்ம பூமியின் அகழ்வாராய்ச்சிக்கு தலைதாங்கிய தொல்பொருள் ஆய்வாளர் பிரஜ் பாசி லால். 1968-72-க்கு இடைப்பட்ட காலங்களில் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் தலைமை இயக்குநராக இருந்தவர். கடந்த 2000-ம் ஆண்டு இந்தியா அரசு சார்பில் பத்ம்பூஷண் விருது அவருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், தற்போது பத்ம விபூஷண் வருதும் வழங்கப்படுகிறது.
உத்தரப் பிரதே மாநிலம் ஜான்சியில் 1921-ம் ஆண்டு பிறந்தவர் பிரஜ் பாசி லால். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தில் முதுகலை பட்டம் பெற்றார். இதைத்தொடர்ந்து அவருக்கு தொல்பொருள் ஆராய்ச்சியில் ஆர்வம் தொற்றிக்கொண்டது. இந்தத் துறையில் கொண்ட தீரா ஆர்வம் காரணமாக புகழ்பெற்ற பிரிடிஷ் தொல்பொருள் ஆய்வாளர் மோர்டிமர் வீலரிடம் 1943-ம் ஆண்டு அகழ்வாராய்ச்சியில் பயிற்சி பெற்றார்.
பயிற்சியை முடித்துவிட்டு, இப்போதைய பாகிஸ்தானில் இருக்கும் டாக்ஸிலா தளத்திலிருந்து தொல்பொருள் ஆராய்ச்சியாளராக தனது பணியை தொடங்கினார். பிரஜ் லால் தனது 50 ஆண்டுகாலத்தில் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளையும், புத்தகங்களையும் எழுதியுள்ளார். 50-க்கும் அதிமான அவரது புத்தகங்களை எழுதியுள்ளார்.
1950-52-க்கு இடையில் அவர் பல்வேறு இடங்களில் மேற்கொண்ட ஆராய்ச்சியின் விளைவாக இந்தோ-கங்கை பிரிவு மற்றும் மேல் யமுனா - கங்கா தேவாப் ஆகியவற்றில் பல்வேறு வர்ணங்கள் பூசப்பட்ட சுடு களிமண்ணால் பரப்பப்பட்ட தளங்களை கண்டுபிடித்தார். மகாபாரதத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பல தளங்களை தோண்டிய அவர், 1975-ம் ஆண்டு `இந்தியாவின் கடந்த காலத்தை தேடி - ஹஸ்தினாபுரம் மற்றும் அயோத்தியில் அகழ்வாராய்ச்சி வெளிச்சம்' என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதினார். அதில், 'இங்கு கிடைக்ககூடிய தொல்பொருள் சான்றுகளை அடிப்படையாக கொண்டு பார்த்தால், மகாபாரதம் கதை நிகழ்ந்திருக்கலாம், அதற்கான அறிகுறிகள் தெரிகின்றன; காலப்போக்கில் அவை மாற்றபட்டிருக்கின்றன' என்று கூறினார்.
மேலும், 'ரிக் வேத மக்கள் ஹரப்பா நாகரீகத்தின் ஒரு பகுதியாவே இருந்தார்கள்' என்ற லாலின் கருத்து கடும் கண்டனங்களை எதிர்கொண்டது. அதேபோல, வரலாற்று ஆசிரியரான ஆர்.எஸ்.ஷர்மாவின் ஆரிய படையெடுப்பு கோட்பாட்டை தனது புத்தகத்தில் விமர்சித்திருந்தார் பிபி லால்.
இதனையடுத்து 1975-ம் ஆண்டில் `ராமாயண தளங்களில் தொல்லியல்' என்ற தலைப்பில் மற்றொரு ஆய்வைத் தொடங்கினார் லால். இந்தத் திட்டம் மார்ச் 31-ம் தேதி 1975-ம் ஆண்டு அயோத்தியில் தொடங்கப்பட்டது. அவரது இந்தத் திட்டத்துக்கு இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம், குவாலியரின் சிவாஜி பல்கலைகழகம், மற்றும் உத்தரப் பிரதேசத்தின் தொல்பொருள் துறை ஆகியவை நிதியுதவி அளித்தன. அடிப்படையில் அவர் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவர் என்பதால் தொடர்ந்து தன்னுடைய ஆய்வுகளையும் ஆன்மிகத்தின் அடிப்படையிலேயே கொண்டு சென்றார்.
இந்த அகழ்வாராய்ச்சி அயோத்தி, பரத்வாஜ் ஆசிரமம், நந்தி கிராம், சித்ரகூட், சிருங்கவெரபுரா உள்ளிட்ட 5 ராமாயண தளங்களில் நடைபெற்றது. தீவிரமாக நடைபெற்ற இந்த அகழ்வாராய்ச்சி குறித்து ஆய்வறிக்கை ஒன்றில், ``கிமு 8-ம் நூற்றாண்டுக்கு முன்னர் இந்த தளம் இருந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை என்பது இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சி மூலம் தெரியவருகிறது” என்றார். அதுவரை அவர், கோயில் எச்சங்கள் தொடர்பாக எதையும் குறிப்பிடவில்லை.
காலம் செல்ல செல்ல `தூண் அடிப்படை கோட்பாடு’ என்ற தலைப்பில் 1990-களில் தான் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியின் அடிப்படையில் கட்டுரை ஒன்றை எழுதினார். அதில் அவர், பாபர் மசூதிக்கு அடித்தளத்தில் கோயில் போன்ற தூண்கள் அமைந்திருப்பதை தான் கண்டுபிடித்தாகக் குறிப்பிட்டார். பின்னர் 2008-ம் ஆண்டு அவர் எழுதிய Rama is Historicity, Mandir and Setu என்ற புத்தகத்தில், ``பாபர் மசூதி தூண்களின் கீழே 12 கல் தூண்கள் இருக்கின்றன. அவை இந்து உருவங்களை உள்ளடக்கியிருக்கின்றன. இவை மசூதியைச் சேர்ந்தவை இல்லை” என்று குறிப்பிட்டார். அவரது இந்த அகழ்வாராய்ச்சிகளுக்காக இந்திய அரசு தற்போது பத்ம விபூஷண் விருது வழங்கியிருக்கிறது.
- மலையரசு