முகவரிகள் மாறியதால் முதியவரின் உடலும் மாறியது... கேரளாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

முகவரிகள் மாறியதால் முதியவரின் உடலும் மாறியது... கேரளாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
முகவரிகள் மாறியதால் முதியவரின் உடலும் மாறியது... கேரளாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
Published on

கேரளாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட தந்தையை அழைத்துச்செல்ல அரசு மருத்துவமனைக்கு சென்ற மகனுக்கு கிடைத்தது, இறந்து ஐந்து நாட்களான தந்தையின் உடல். மகனுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி என்ன? 


கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் தலவூர் பகுதியை சேர்ந்தவர் சுலைமான் குஞ்சு (78). இவருக்கு கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி, உடல் நலக்குறைவு ஏற்பட, அவரது மகன் நவுஷாத், தனது வயதான தந்தையை அழைத்துக்கொண்டு புனலூர் தாலுகா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். அங்கு சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு 15 நாட்களுக்குப்பின் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து சுலைமான் குஞ்சுவை கொல்லம் பாரப்பள்ளி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றுவதாக புனலூர் தாலுகா மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறி, ஆம்புலன்ஸில் ஏற்றி சென்றுள்ளனர். கொரோனா நோயாளியுடன் செல்ல வேறு யாருக்கும் அனுமதி இல்லாததால் மகன் நவுஷாத், மறுநாள் தனது தந்தையை காண பாரப்பள்ளி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். 


அங்கு சென்ற அவரிடம் தந்தை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், தந்தையை காண முடியாது என செவிலியர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து செவிலியர்களின் போன் எண்னை வாங்கிக் கொண்ட மகன் தந்தையின் உடல் நலம் குறித்து தினமும் செவிலியர்களிடம் கேட்டறிந்துள்ளார்.

தந்தைக்கு கொடுப்பதற்காக உடைகளும், உணவும் செவிலியர்கள் மூலம் கொடுத்தனுப்புவதை வழக்கமாக கொண்டிருந்தார் மகன் நவுஷாத். இப்படியாக நாட்கள் நகர கடந்த அக்டோபர் 16ம் தேதி, தனது தந்தை சுலைமான் குஞ்சுவிற்கு கொரோனா “நெகட்டிவ்:” ஆகி விட்டதாகவும், அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டதாகவும் பாரப்பள்ளி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.


இதைக்கேட்ட நவுஷாத்தின் குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்துள்ளது. ஒரு மாதத்திற்கும் மேலான போராட்டத்தில் வயதான தந்தையை காப்பாற்றிவிட்ட மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் நன்றி தெரிவித்த நவுஷாத், கொரோனாவிலிருந்து குணமடைந்த தந்தையை வீட்டிற்கு அழைத்து செல்ல கொல்லம்பாரப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கு கொரோனா குணமடைந்த வார்டிற்கு ஆசையோடு தந்தையை காணச் சென்றவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. அங்கே அவருக்கு காட்டப்பட்டது குணமடைந்து வீட்டிற்கு செல்ல தயாராக இருந்த வேறொருவரை. தனது தந்தையின் வயதை ஒத்த அவரை, இது தனது தந்தை இல்லை எனவும், தனது தந்தையின் பெயர் சுலைமான் குஞ்சு எனவும் தெரிவித்துள்ளார். 


அதற்கு மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் டாக்டர்கள், இவர் தான் சுலைமான் குஞ்சு எனவும், நவுஷாத் அடிக்கடி நலம் விசாரிக்கும் தந்தை இவர் தான் எனவும், நவுஷாத் வழங்கிய ஆடைகள் மற்றும் உணவு ஆகியன இவருக்குத்தான் வழங்கப்பட்டது எனவும் தெரிவித்தனர். மேலும் பதறிய நவுஷாத், தனது தந்தை சுலைமான் குஞ்சு, கொல்லம் தலவூர் பகுதியை சேர்ந்தவர் எனக்கூற மருத்துவமனை நிர்வாகம் அப்போதுதான் முகவரியை ஆராய்ந்துள்ளது. இந்த சுலைமான் குஞ்சு, கொல்லம் சாஸ்தான்கோட்டையை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.

அப்படியென்றால், மகன் நவுஷாத் தேடும் தலவூர் சுலைமான் குஞ்சு எங்கே என ஆராய்ந்தபோது, அவர் உடல் நலக்குறைவால் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒரு வாரத்திற்கு முன்பே அனுப்பப்பட்டு விட்டதாகவும், இது குறித்து தங்களின் மொபைல் ஃபோனில் அழைத்தபோது தாங்கள் போனை எடுக்கவில்லை எனவும் மருத்துவமனை நிர்வாகம் பதிலளித்தது.


எப்படியோ நடந்தது நடந்துவிட்டது, தனது தந்தை நலமுடன் இருந்தால் போதும் என மகன் நவுஷாத், திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு சென்று பெயர், முகவரி சொல்லி விசாரித்தபோது, நவுஷாத்தின் தந்தை தலவூர் சுலைமான் குஞ்சு, கொரோனா பாதிப்பில் இருந்து மீள முடியாமல் ஐந்து நாட்களுக்கு முன் உயிரிழந்ததாக நெஞ்சை உலுக்கும் தகவலை கூறியுள்ளனர்.


கொரோனா தொற்றில் இருந்து தந்தை தப்பித்ததாக நினைத்து ஆசையோடு அழைத்துச் செல்ல போனவருக்கு கிடைத்தது இறந்து ஐந்து நாட்களாகிப்போன தந்தையின் உடல் மட்டும்தான். இது நவுஷாத் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் பெருத்த ஏமாற்றத்தையும், கவலையையும் அளித்துள்ளது. இது குறித்து தகுந்த விசாரணை நடத்தப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.


சந்தோஷத்தோடு அழைத்துவரப்போன தந்தையை, இறந்த உடலாய் ஒப்படைத்தது மருத்துவமனை நிர்வாகம். கொரோனா விதிமுறைப்படி சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்ட உடல், அதே விதிமுறைப்படி அடக்கம் செய்யப்பட்டுள்ளது. முகவரிகள் தவறியதால் இன்னும் ஓயாமல் இருக்கிறது நவுஷாத் வீட்டில் எதிர்பார்ப்பு தந்த அந்த ஏமாற்றத்தின் அழுகைக் குரல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com