நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் ஒரே மாதிரியான கட்டணம் வசூலிக்க முடிவானதையொட்டி, கடந்த 8 நாள்களாக நடைபெற்ற லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தை லாரி உரிமையாளர்கள் கைவிட்டனர்.
நாடு முழுவதும் கடந்த 20-ந் தேதி முதல் டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும். 3-வது நபர் காப்பீட்டு தொகையை குறைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் காலவரம்பற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 8 நாட்களாக நடைபெற்ற போராட்டத்தினால் லாரி உரிமையாளர்களுக்கு ஒரு நாளுக்கு ரூ.4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது. மத்திய அரசுக்கு ஒரு நாளுக்கு ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், மத்திய போக்குவரத்து துறை செயலாளர் மாலிக் தலைமையில் அதிகாரிகள், லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கலந்துகொண்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உறுதி அளிக்கப்பட்டபடி, நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ஒரே மாதிரியான சுங்கக் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தகவல் தெரிவித்துள்ளது. மத்திய அரசுடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அதன் தலைவர் குல்தரன் சிங், இக்கோரிக்கையை 6 மாதத்தில் நடைமுறைப்படுத்தபடும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் 3வது நபர் இன்சூரன்ஸ் கட்டண உயர்வு என்பது ஆண்டுக்கு 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கவும், லாரி ஓட்டுநர்களுக்கு மருத்துவ இன்சூரன்ஸ், ஒரு லாரிக்கு ஓரு ஓட்டுநர் என்ற கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளதாகவும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தகவல் தெரிவித்துள்ளது.இதனையடுத்து கடந்த 8 நாட்களாக நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.