சபரிமலையில் போராட்டங்கள் கூடாது: நீதிமன்றம்

சபரிமலையில் போராட்டங்கள் கூடாது: நீதிமன்றம்
சபரிமலையில் போராட்டங்கள் கூடாது: நீதிமன்றம்
Published on

சபரிமலை சன்னிதானம் போராட்டம் நடத்துவதற்கான களமல்ல என்றும் அங்கு எந்த போராட்டமும் நடைபெறக் கூடாது என்றும் கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பால் கேரளாவில் பெரும் போராட்டம் வெடித்தது. இதையடுத்து அக்டோபர் மாதம் இரண்டு பெண்கள் சன்னிதானம் வரை சென்று பக்தர்கள் போராட்டத்தால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் துரிதமாக செயல்பட்டார். ஆனால் அவரின் செயல்பாடுகள் தோல்வியில் முடிவடைந்தது.

இந்நிலையில் மண்டல பூஜைக்காக சபரிமலை நவம்பர் 16-ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. 2 மாதங்கள் கோயில் நடை திறந்திருக்கும் சூழலில் சபரிமலையில் எந்தவிதமான போராட்டமும் நடைபெறக்கூடாது என கேரள உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. சபரிமலை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுகளை விசாரித்த நீதிபதிகள் பி.ஆர் ராமசந்திரமேனன் மற்றும் என். அனில்குமார் கொண்ட அமர்வு சபரிமலை சன்னிதானம் போராட்டம் நடத்துவதற்கான களமல்ல என கூறி அங்கு எந்த போராட்டமும் நடைபெறக்கூடாது என தெரிவித்தனர். 

மேலும் சன்னிதானத்தில் பக்தர்கள் ஐயப்ப மந்திரங்கள் உச்சரிப்பதற்கு காவல்துறையினர் விதித்த தடையை ரத்து செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். சன்னிதானத்தில் பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் சன்னிதான வளாகத்தில் சற்று தங்கிச் செல்லவும் நீதிபதிகள் அனுமதியளித்தனர். ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் பிஆர் ராமன், ஸ்ரீரி ஜெகன் மற்றும் மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஏ ஹேமசந்திரன் ஆகியோர் சபரிமலை சன்னிதானத்தில் நீதிமன்றத்தின் பார்வையாளர்களாக இருப்பார்கள் என்றும் கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com