பாலியல் வன்கொடுமை வழக்கில் மலையாள தயாரிப்பாளரும், நடிகருமான விஜய் பாபுவுக்கு முன்ஜாமீன் வழங்கி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல மலையாள தயாரிப்பாளரும், நடிகருமான விஜய் பாபுவின் புரொடக்ஷன் ஹவுஸ் தயாரித்த படங்களில் நடித்த பெண் நடிகை ஒருவர், கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி கொச்சி போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் கடந்த ஒன்றரை மாதங்களாக விஜய் பாபுவால் தான் உடல் ரீதியான தாக்குதல் மற்றும் பாலியல் தொந்தரவுகளை அனுபவித்ததாக அந்த பெண் விவரித்தார். இதற்கிடையே, ஃபேஸ்புக் நேரலையில் உரையாடிய விஜய் பாபு, பாதிக்கப்பட்ட அந்த நடிகையின் பெயர் உள்ளிட்ட அடையாளத்தை பொதுவெளியில் அம்பலப்படுத்தினார்.
இதனையடுத்து நடிகையை பாலியல் வன்கொடுமை செய்ததாக விஜய் பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் பாலியல் புகார் கூறிய பெண்ணின் பெயரை வெளியிட்டதால் விஜய் பாபு மீது மேலும் ஒரு வழக்கை போலீசார் பதிவு செய்தனர். இதனிடையே இன்னொரு பெண்ணும் நடிகர் விஜய் பாபு மீது பாலியல் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதன் பேரில் எர்ணாகுளம் போலீசாரும் விஜய் பாபு மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் ஃபேஸ்புக் பதிவில் நடிகர் விஜய் பாபு தனது மீதான பாலியல் புகார்களை மறுத்தார். ''நான் எந்த தவறும் செய்யாததால் பயப்படவில்லை. உண்மையாக நான்தான் பாதிக்கப்பட்டுள்ளேன். இந்த நாட்டின் சட்டம் அவளைப் பாதுகாக்கிறது, நான் கஷ்டப்படுகையில் அவள் நிம்மதியாக இருக்கிறாள்'' என்று அவர் கூறினார். இந்த சம்பவத்தில் இருந்து, விஜய் பாபு தலைமறைவாக உள்ளதால், கைது செய்வதற்கு பயந்து துபாய்க்கு தப்பிச் சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மே 9 அன்று, எர்ணாகுளத்தில் உள்ள உள்ளூர் நீதிமன்றம், ரெட் கார்னர் நோட்டீஸ் (ஆர்சிஎன்) வெளியிடுவதற்கு முன்னோடியாக விஜய் பாபுவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து விஜய் பாபு சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி பெச்சு குரியன் தாமஸ் அடங்கிய அமர்வு, விஜய் பாபுவுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அடுத்த விசாரணை ஜூன் 2ஆம் தேதி நடைபெறும் எனவும் கேரள உயர்நீதிமன்றம் அறிவித்தது.