ராஜஸ்தானின் சிகர் மாவட்டத்தை சேர்ந்தவர் கப்பர் அஹ்மத் கச்சாவா. 52 வயதான அவர் அதே பகுதியில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டி வருகிறார்.
‘நேற்று அதிகாலை நான் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது வழிமறித்த இருவர் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என கோஷமிட சொல்லி என்னை வற்புறுத்தினர். அதை நான் செய்யாததால் என்னை முரட்டு தானமாக அடித்து, என்னிடமிருந்த மணி பர்ஸை அவர்கள் பறித்து சென்றனர்’ என போலீசில் புகார் கொடுத்துள்ளார் கப்பர் அஹமத்.
‘வெள்ளிக்கிழமை காலை 4 மணியளவில் நான் பயணிகளை அருகிலுள்ள கிராமத்தில் இறக்கிவிட்டு திரும்பி வந்தபோது ஒரு காரில் இருந்த இரண்டு பேர் தடுத்து நிறுத்தி என்னிடம் புகையிலை கேட்டனர். நான் கொடுத்த புகையிலையை எடுக்க மறுத்ததோடு ‘மோடி ஜிந்தாபாத்’ என்று சொல்லும்படி அவர்கள் வற்புறுத்தினார்கள். அதை நான் சொல்ல மறுத்ததால் என்னை கடுமையாக அவர்கள் அறைந்தார்கள்.
அங்கிருந்து ஆட்டோவில் தப்பிய என்னை விடாமல் துரத்தி வந்து அடித்தார்கள். ‘மோடி ஜிந்தாபாத்’ மற்றும் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷமிடும் படியும் கட்டாயப்படுத்தினர். அதை நான் சொல்ல மறுத்ததால் மீண்டும் சரமாரியாக அடித்து என்னிடமிருந்த மணி பர்ஸை அவர்கள் பறித்து சென்றனர்.
அவர்கள் அடித்ததில் எனது பற்கள் உடைந்தன. குச்சியால் தாக்கியதால் என் இடது கண், கன்னம் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதோடு எங்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய பின்னரே ஓய்வெடுப்போம் என்றும் அவர்கள் கூறினர்’ என தெரிவித்துள்ளார் அவர்.
தற்போது கப்பர் அஹமத் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை தாக்கிய இருவரையும் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.