உத்தரகாண்ட்டின் டேராடூன் உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் பள்ளி மாணவர்கள் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் சம்பவம் அதிகரித்துள்ளது.
உத்தரகாண்ட் டேராடூன் பள்ளி ஒன்றில், பத்தாம் வகுப்பு மாணவியை ஆசிரியர் அழைப்பதாக சொல்லி சக மாணவன் ஹாஸ்டல் பின் பக்கமுள்ள மறைவிடத்திற்கு அழைத்துச்சென்றுள்ளார். அங்கே சக மாணவர் மற்றும் மேல்நிலை மாணவர்கள் இரண்டு பேர் தயாராக இருந்துள்ளனர்.
நான்கு பேரும் சேர்ந்து மாணவியை கூட்டாக பாலியல் வான்கொடுமை செய்துள்ளனர். ''விஷயத்தை வெளியே சொன்னால் நீயும் இதே ஸ்கூலில் படிக்கும் உன் அக்காவும் உயிரோடு இருக்கமுடியாது'' என்று அவர்கள் மிரட்டியுள்ளனர். கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், மிரட்டலில் ஈடுபட்டவர்கள் சட்டப்படி சிறுவர்கள். இந்தக் கொடுமை பற்றி தெரிந்தும் பள்ளி நிர்வாகி மற்றும் ஊழியர்கள் வெளியே தெரியாமல் பார்த்துக்கொண்டுள்ளனர்.ஆனால் தங்கையின் நடவடிக்கையில் மாற்றம் காணும் அக்கா, சந்தேகப்பட்டு உறவினர்களிடம் விஷயத்தை சொல்லியுள்ளார். அவர்கள் புகார் அளித்ததின் பேரில் காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர். பின்னர் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நான்கு மாணவர்கள், விஷயத்தை மூடி மறைத்த பள்ளியின் நான்கு ஊழியர்கள் மற்றும் பள்ளி இயக்குநர் என மொத்தம் ஒன்பது பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதேபோன்று உத்தரகாண்ட்டில் உள்ள புரானி கிராமத்தில் கடைக்குச்சென்று வீடு திரும்பி 7ஆம் வகுப்பு மாணவியை, 3 சிறுவர்கள் வழிமறித்துள்ளனர். தெருவின் ஓரமாக அந்தச் சிறுமியை இழுத்துச்சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அத்துடன் சிறுமியை காயப்படுத்தி, வெளியே சொல்லக்கூடாது என மிரட்டி அனுப்பியுள்ளனர். வீடு திரும்பியது பெற்றோர்களிடம் நடந்ததை சிறுமி கூறியுள்ளார். இதையடுத்து காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டு, 3 சிறுவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இங்கும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் குற்றவாளிகள் சிறுவர்கள். பாலியல் குற்றங்களை குறைக்க வேண்டுமென்றால், தண்டனை சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்பது அனைவரது கோரிக்கையாகவும் உள்ளது. அதில் குற்றவாளிகளின் வயது வரம்பை மாற்றி அமைக்க வேண்டும் என்பதை, இந்தக் குற்றங்கள் வெளிக்காட்டுகின்றன.