மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் ஹரி குப்தா. கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட அவர் அந்த மாநிலத்தில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் அவர் நேற்று அதிகாலை ஒரு மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அந்த தகவலை அவரது குடும்பத்தினரிடம் நேற்று பிற்பகல் தான் ஆஸ்பத்தரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
‘எங்களுக்கு தகவல் கிடைத்ததும் வீட்டில் உள்ள எல்லோரும் என் அப்பாவை கடைசியாக பார்க்க மருத்துவமனைக்கு வந்தோம். ஆனால் அவரது உடலை தகனத்திற்கு எடுத்து சென்று விட்டதாக மருத்துவனமனை தரப்பினர் சொன்னார்கள். உடனடியாக அப்பாவின் உடல் கொண்டு செல்லப்பட்ட ஷிபூர் மயானத்திற்கு நாங்கள் சென்ற போது அவரது உடலை பார்க்க 51 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்கள் சொன்னார்கள்.
அது தொடர்பாக அவர்களிடம் நாங்கள் பேசியதில் 31 ஆயிரம் கொடுக்கும்படி நிர்பந்தித்தார்கள். போலீசுக்கு தகவல் கொடுத்தோம். அவர்கள் வருவதற்குள் அவரது முகத்தை கூட பார்க்க அனுமதிக்காமல் எரியூட்டி விட்டனர். இது குறித்து போலீசில் புகார் கொடுக்க உள்ளோம்’ என தெரிவித்துள்ளார் ஹரி குப்தாவின் மகன் சாகர்.