மாணிக்கம் தாகூர் மற்றும் ஜோதிமணி உள்ளிட்ட நான்கு காங்கிரஸ் உறுப்பினர்களின் இடைநீக்கம் திங்கட்கிழமையான இன்று ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து மக்களவையில் இதுவரை நீடித்து வந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது. அதைத்தொடர்ந்து மழைக்கால கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் இருந்து எதிர்பார்க்கப்பட்ட விலைவாசி உயர்வு மீதான விவாதம் காரசாரமாக நடைபெற்றது.
நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் திங்கட்கிழமை காலை இரண்டு முறை ஒத்திவைப்பு நடைபெற்றதால் முடங்கிய நிலையில், இடை நீக்கம் செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் வருத்தம் தெரிவித்தால் அவர்களுடைய இடைநீக்கத்தை ரத்து செய்யலாம் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி எதிர்க்கட்சிகளுக்கு சமாதான அழைப்பு விடுத்தார். அவர்கள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட மாட்டார்கள் என்றும் பதாகைகளை ஏந்தி சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட மாட்டார்கள் எனவும் காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழு தலைவர் உறுதிமொழி அளித்தால் பிரச்சனை தீரும் என அவர் தெரிவித்தார்.
தொடர் முழக்கங்களை கைவிட்டால் இன்றே மக்களவையில் விலைவாசி உயர்வு தொடர்பான விவாதத்தை நடத்தலாம் எனவும் நாளை மாநிலங்களவையில் இதற்கான விவாதம் நடைபெறலாம் எனவும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து இரண்டு மணிக்கு மக்களவை கூடியதும் சபாநாயகர் ஓம் பிர்லா எதிர்க்கட்சிகள் அமைதி காத்து, அவை அலுவல்களில் பங்கேற்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழு தலைவரான அதிர் ரஞ்சன் சௌத்ரி எதிர்க்கட்சிகள் விலைவாசி உயர்வு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்த விவாதங்களில் பங்கேற்க விரும்புவதாக தெரிவித்தார். நான்கு காங்கிரஸ் உறுப்பினர்களின் இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ், மற்றும் பிரதாபன் இந்த கூட்டத்தொடர் முழுவதற்கும் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என எதிர்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த கூட்டத்தொடர் முழுவதும் அவர்கள் சஸ்பெண்ட் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த உத்தரவை ரத்து செய்யலாம் என ஓம் பிர்லா தெரிவித்தார். மத்திய அரசு சார்பாக இடை நீக்கத்தை ரத்து செய்ய தீர்மானம் முன்மொழியப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட சபாநாயகர், சஸ்பெண்ட் செய்யப்பட்ட உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதி அளித்தார். இதைத்தொடர்ந்து ஜோதிமணி விலைவாசி உயர்வு தொடர்பான விவாதத்தில் பங்கேற்றார்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொரோனா வைரஸ் பாதிப்பால் உடல்நலம் இன்றி இருந்ததால் நடத்த முடியாத விலைவாசி உயர்வு தொடர்பான விவாதத்தை உடனே நடத்தலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மனிஷ் திவாரி விலைவாசி உயர்வை கண்டித்தும், ஜிஎஸ்டி வரியை திரும்ப பெற வலியுறுத்தியும், விவாதத்தை தொடங்கி வைத்தார்.
திமுக சார்பாக பேசிய கனிமொழி எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது மக்களை பாதிக்கிறது என கண்டனம் தெரிவித்தார். பென்சில் போன்ற பொருட்களின் விலை கூட விலை உயர்ந்துள்ளது என அவர் சுட்டிக் காட்டினார். பணமதிப்பிழப்பு மூலம் கருப்பு பணம் ஒழியும் என அரசு விளக்கி இருந்த நிலையில், மீண்டும் கருப்பு பணம் எங்கிருந்து வந்தது என அவர் வினா எழுப்பினார். கனிமொழி மற்றும் ஜோதிமணி இருவரும் தமிழிலேயே பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சமையல் எரிவாயுவின் விலை உயர்வால் மக்கள் காய்கறிகளை பச்சையாக உண்ண வேண்டும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறதா? என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ககோலி கோஷ் தஸ்திதர் கேள்வி எழுப்பியாறு ஒரு கத்தரிக்காயை கடித்து காண்பித்ததும் அவையில் சிரிப்பலை எழுந்தது.