நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டணத்தைக் குறைக்கும் வகையில் புதிய கொள்கை உருவாக்கப்படவுள்ளது.
ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கோ அல்லது மாநிலத்திற்கோ பயணம் செய்யும்போது தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடியில் கண்டிப்பாக கட்டணம் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணமும் மக்கள் பயணிக்கும் வாகனத்தை பொருத்து மாறுபடும் என்பது வழக்கம்.
இந்நிலையில் சுங்கச்சாவடி அமைக்கப்படும் தூரம், கட்டண முறை உள்ளிட்டவற்றை சீரமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து நகரங்களுக்கு வெளியே சுங்கச்சாவடியை அமைப்பதில் கவனம் செலுத்தவுள்ளது. சுங்கச்சாவடியில் கூட்டத்தைக் குறைக்கும் வகையில் மின்னணு முறையில் கட்டணம் கட்டுவதற்கு வசதி செய்யப்படவுள்ளது. பயணத் தூரத்திற்கு ஏற்றவாறு கட்டணத்தை நிர்ணயிக்கவும் திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நெடுஞ்சாலைத்துறை, சுங்கச்சாவடியில் டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்த வாகன ஓட்டிகளை ஊக்குவிக்க வேண்டும். 70% முதல் 80% வரையிலான வாகன ஓட்டிகள் டிஜிட்டல் பரிவர்த்தணையில் ஈடுபட்டால் தான் சுங்கச்சாவடியில் நெருக்கடியை குறைக்கலாம் என்று தெரிவித்துள்ளது
முன்னதாக பட்ஜெட்டின் போது பேசிய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, ''சுங்கச்சாவடியில் புதிய திட்டத்தை உட்புகுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இது ‘பயன்பாட்டுக்கு ஏற்ப பணம் செலுத்துதல்’ என்ற வகையில் இருக்கும். இது பசுமைவழிச்சாலைகளில் எளிதாக அமலுக்கு கொண்டு வந்துவிடலாம்'' என்று தெரிவித்தார்.
60 கிமீ ஒரு சுங்கச்சாவடி இருக்கிறது என்று வைத்துகொண்டால், 30கிமீ வரை மட்டுமே பயணம் செய்பவர்களும் 60கிமீ தூரத்துக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். புதிய சுங்கச்சாவடி கொள்கையானது பயணிக்கும் தூரத்துக்கும் மட்டும் கட்டணம் வசூலிக்க வழிவகை செய்யும். இந்தச் சுங்கச்சாவடி கட்டணக் கொள்கை மூன்று மாதத்தில் அமல்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.