கொரோனா அச்சுறுத்தலை அடுத்து இந்தியாவில் கடந்த ஐந்து மாதங்களாக மூடப்பட்டுள்ள திரையரங்குகளை திறக்க அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட கொரோனா கட்டுப்பாடுகள் தற்போது மெல்ல தளர்த்தப்பட்டு வரும் நிலையில் அரசு இந்த முடிவினை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறைந்த அளவிலான பார்வையாளர்களுடன், மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தி திரையரங்குகள் அடுத்த மாதம் முதல் இயக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு ஒவ்வொரு பார்வையாளர் அல்லது குடும்பங்களுக்கும் இடையே குறைந்தபட்சம் மூன்று சீட் இடைவெளி, முகக்கவசம் அணிவது, சானிடைசர் பயன்படுத்துவது, ஸ்மார்ட்போன் மூலம் டிக்கெட் வழங்குவது, ஒவ்வொரு காட்சிக்கும் இடையே திரையரங்கை கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்துவது, திரையரங்கின் மொத்த இருக்கையில் மூன்றில் ஒரு பங்கு பார்வையாளர்களை மட்டுமே அனுமதிப்பது என பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க அதிகாரிகள் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த விதிகள் திரையரங்குகளுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுட்டள்ளது. பல திரைகளை கொண்ட மால்களை திறப்பதற்கான முடிவினை அரசு எடுக்கவில்லை எனவும் சொல்லப்பட்டுள்ளது.