மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பள்ளி கட்டணம் செலுத்துவதற்காக பதினாறு வயது சிறுமி ஒருவர் மொபைல் போனை திருடியுள்ளார்.
அவர் திருடிய மொபைல் போன் தனியார் துப்பறியும் ஏஜெண்டான தூபேவின் மொபைல் போன் என்பதால் திருடியது சிறுமி தான் என்பதை சில மணி நேரங்களில் கன்டுபிடித்துள்ளார் தூபே.
உடனடியாக அந்த சிறுமியிடம் விசாரணையை மேற்கொண்டுள்ளார் தூபே. விசாரணையில் ‘என் பள்ளி கட்டணமான 2500 ரூபாயை கட்ட முடியாமல் எனது அப்பாவும், அம்மாவும் தவித்து வந்தனர். அதனால் நான் போனை திருடி அடகு கடையில் அடமானம் வைத்து, பள்ளி கட்டணத்தை கட்டி விட்டேன்’ என குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார் அந்த சிறுமி.
அதற்கு சான்றாக போனை அடமானம் வைத்த ரசீது மற்றும் பள்ளியில் கட்டணம் கட்டிய ரசீதையும் அந்த சிறுமி தூபேவிடம் காண்பித்துள்ளார். தற்போது பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் அந்த சிறுமி பதினொன்றாம் வகுப்பில் 71 சதவிகித மதிப்பெண்களை பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பின்னர் அந்த சிறுமியை இது போல இனி செய்யக் கூடாது என கண்டித்ததோடு அந்த சிறுமிக்கான பள்ளி கட்டணத்தை செலுத்துவதாகவும் உறுதி கொடுத்துள்ளார்.