வேகமாக ஓட்டிச் செல்லும்போது ஓலா எலக்ரிக் ஸ்கூட்டரின் முன்சக்கரங்கள் கழண்டு சென்று விடுவதாக பயனர்கள் பலர் புகார் தெரிவித்து வருகின்றனர்.
ஓலாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மீண்டும் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி உள்ளது. இம்முறை பேட்டரி வெடிப்பு அல்ல... இயந்திரக் கோளாறுகள் பற்றிய புகார்கள். ஓலா ஸ்கூட்டரின் முன்பக்க சஸ்பென்ஷனின் நீடித்த தன்மை குறித்த புகார்கள் குவியத் துவங்கியுள்ளன. ஸ்கூட்டரை ஓட்டிக் கொண்டிருக்கும்போதே முன்சக்கரம் உடைந்துபோய் விட்டதாக பயனர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
முதல் சம்பவம் ஸ்ரீநாத் மேனன் என்பவரால் தெரிவிக்கப்பட்டது. அவர் சவாரி செய்யும் போது முன் சஸ்பென்ஷன் யூனிட் தோல்வியடைந்ததாகக் கூறினார். குறைவான வேகத்தில் தான் பயணித்தபோதிலும் முன்சக்கரம் உடைந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, இரண்டாவது பயனர் தனது ஸ்கூட்டர் இதேபோன்ற தோல்வியைச் சந்தித்ததாக பதிவிட்டார். ஆனால் அது மணிக்கு 25 கிமீ வேகத்தில் பயணித்தபோது முன்சக்கரம் உடைந்ததாகவும் தாம் சுவர் ஒன்றில் மோதியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல பயனர்கள் இதே போன்ற ஓலா முன்சக்கர பிரச்னையை வெவ்வேறு புகைப்படங்களுடன் பகிர்ந்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஓலா எலக்ட்ரிக் இன்னும் பதிலளிக்கவில்லை. ஓலாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, மென்பொருள் கோளாறுகள், பேட்டரி வெடிப்பு, தீ விபத்துகள் உள்ளிட்ட பல்வேறு புகார்களை சந்தித்து வரும் நிலையில் தற்போது அடுத்த புகாராக முன்சக்கரம் உருவெடுத்துள்ளது. இத்தனை புகார்கள், சர்ச்சைகளுக்கு மத்தியிலும் ஓலா நிறுவனம் சமீபத்தில் தனது ஸ்கூட்டரின் விலையை ரூ.10 ஆயிரம் உயர்த்துவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.