இடைக்கால பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய விவரங்கள் குறித்து அனைத்து துறை அமைச்சகங்களிடமிருந்தும் மத்திய நிதியமைச்சகம் தகவல் கேட்டுள்ளது.
2019-2020ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை (இடைக்கால பட்ஜெட்) தயாரிப்பதற்கான ஆரம்ப கட்டப்பணிகளில் மத்திய பாஜக அரசு தொடங்கியுள்ளது.அதன் முதன்கட்டமாக வரும் நிதிஆண்டில் பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய அந்தந்த துறை தொடர்பான விவரங்களை அனைத்து அமைச்சகங்களிடமிருந்தும் மத்திய நிதியமைச்சகம் கேட்டுள்ளது. மேலும் வரும் 15ஆம் தேதிக்குள் விவரங்களை அனுப்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2019-2020ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தயாரிப்பதற்கான ஆரம்ப கட்டப்பணிகளை இரு வாரத்திற்கு முன்பே மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தொடங்கியுள்ளார். இடைக்கால பட்ஜெட் என்பதாலும் பாஜக ஆட்சிக்காலத்தின் கடைசி பட்ஜெட் என்பதாலும் வரி சலுகைகளுக்கான வாய்ப்பு அதிகம் எனத் தெரிகிறது. தேர்தல் ஆண்டில் வெளியாகும் பட்ஜெட் எப்போதுமே பல சலுகைகள் இடம்பெறக் கூடும். ஆதலால் இந்த பட்ஜெட் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பட்ஜெட்டில், விலைவாசி குறைய நடவடிக்கை, வருமான வரி விலக்கு வரம்பு உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகளை நடுத்தர வர்க்க மக்கள் மிகவும் எதிர்பார்க்கின்றனர். கடந்த ஆண்டு பட்ஜெட்டில் வருமான வரி வரம்பில் நிதியமைச்சர் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயிக்கும் முறையால் அவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலையில் பெரும்பான்மை பங்கு வகிப்பவை மத்திய மாநில அரசுகளின் கலால் வரிகள்தான். இதனால் அவற்றின் மீதான வரிகளை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இவற்றை நீக்கி உச்சபட்ச ஜி.எஸ்.டி.யான 28% வரியை விதித்தாலும் பெட்ரோல், டீசல் இரண்டுமே 50 ரூபாய்க்கும் கீழ் வந்துவிடும்.இது இந்த பட்ஜெட்டின் போதாவது நிறைவேற்றப்பட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.