கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து காக்க ஏன் மாஸ்க் அணிகிறோம் தெரியுமா? அதேநேரம் மாஸ்க் போன்ற மருத்துவ பொருட்களின் தேவை அதிகமாகியுள்ள தருணத்தை முன்வைத்து பலர் அதிக விலைக்கு விற்பனை செய்து வரும் கொடுமையும் நடந்து வருகிறது. அதைப் பற்றி அலசி ஆராய்கிறது இந்தக் கட்டுரை.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 32 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் விளக்கம் அளித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் வாழும் 284 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதை அறிய அவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து வருவதாக அம்மாநில சுகாதார அதிகாரி தெரிவித்திருந்தது.
இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் அதிகம் கொரோனா கிருமி பரவாது என்ற நம்பிக்கையில் பலரும் தங்களை தற்காத்துக் கொள்வதில் அக்கறை காட்டாமல் உள்ளனர். அடிப்படையாக ‘மாஸ்க்’ அணிவதில் கூட தயக்கம் காட்டுகின்றனர். உண்மையில் நாம் ஏன் மாஸ்க் அணிகிறோம்? அதன் பயன்தான் என்ன? கோவை அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் ரவிக்குமாரிடம் பேசினோம். அவர் சொன்ன பல அடிப்படைத் தவல்கள் ஆச்சரியத்தை அளிக்கும் படி இருந்தது.
“மாஸ்க் அணிவதால் கொரோனா வராது என்பதில்லை. நாம் அணியும் மாஸ்க் நம்மை அடிப்படையாக இருக்கும் நோய் தொற்றில் இருந்து காப்பாற்றுகிறது அவ்வளவுதான். ஒருவர் தும்பல் போடும்போது அது சராசரியாக அதன் வேகம் 80 கிலோ மீட்டர் இருக்கும். அதுவே அவர் இரும்பினால் அது 20 கிலோ மீட்டர் வேகம்தான் இருக்கும். ஒரு தும்பல் 3 மீட்டர் தூரம் பரவக்கூடியது. ஆகவே இரும்பலை கண்டால் 2 அடி தள்ளி நில். தும்பலைக் கண்டால் தூர விலகிவிடு என்று முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே சொல்லி இருக்கிறார்கள்.
இந்த கொரோனா கிருமி தும்பல் மூலமே பரவும். அவர் தும்பும் சளியில் இருந்து வெளிப்படும் கிருமி அவர் அமர்ந்திருக்கும் இருக்கையில் பரவும். அவர் பேருந்தில் கைப்பிடியை பிடித்துக் கொண்டு பயணிப்பார். இருக்கையில் தன் கையை வைப்பார். இப்படி அவர் சுற்றியுள்ள இடங்களில் அவரது கிருமி பரவும். அதேப் பேருந்தில் பயணிப்பவர்கள் அவர் பிடித்து கொண்டு பயணித்த கைப்பிடியை பிடித்து பயணிப்பார்கள். அதை அறியாமல் கையை கழுவாமல் முகத்தில் வைப்பார்கள். சிலர் மூக்கை தொடுவார்கள்.
ஆக, அப்படியே நமக்குள் அந்தக் கிருமி பரவிடும். அதை தடுக்கத்தான் நாம் மாஸ்க் அணிகிறோம். மாஸ்க் இருக்கும் போது கை முகத்திற்குப் போகாது. மூக்கை தொடாது. ஆகவே அது பாதுகாப்பாக அமைகிறது” என்று கூறிய டாக்டர் ஒருநளைக்கு ஒரு மாஸ்கைதான் பயன்படுத்த வேண்டும். சிலர் ஒரே மாஸ்கை இரண்டு மூன்று நாட்கள் பயன்படுத்துவார்கள். அதுவும் ஆபத்து. அந்த மாஸ்கை அணிந்தவுடனேயே அதில் நம் மூச்சுக்காற்று பட்டுவிடும். மீண்டும் அதை கழற்றி பயன்படுத்துவது நல்லது அல்ல என்கிறார்.
மேலும், இது குறித்து பேசிய ரவிக்குமார், “வெயில் அதிகமாக நிலவும் இந்தியா போன்ற நாட்டில் இந்தக் கிருமி பரவாது என்பது அல்ல. குளிர் பிரதேசங்களில்தான் டி வைட்டமின் குறைபாடு இருக்கும் என முன்பு நம்பிக்கொண்டிருந்தார்கள். ஆனால் நானே இது குறித்து 2500 பேரிடம் ஒரு ஆய்வை நடத்தினேன். அதில் விவசாய வேலை செய்பவர்களுக்கு மட்டும்தான் டி வைட்டமின் குறைபாடு இல்லாமல் உள்ளது. பல துறைகளில் உள்ளவர்கள் தினமும் வெயிலை பார்ப்பதே இல்லை. ஆகவே அவர்கள் டைட்டமின் டி-யினால் பாதிக்கப்படுகிறார்கள்.
நாம் தும்பும் சளியானது வெயிலில் பட்டால் அதில் உள்ள கிருமி அழிந்துவிடும். ஆனால், ஏசி அறையில் தும்பும் போது அந்தக் கிருமி சாகாது. அப்படியே உயிருடன்தான் இருக்கும். ஆகவே, மாஸ்க் அணிவது நல்லது” என்கிறார். இவரது கருத்து படி ஒரு மணிநேரம் வெளியில் சென்று விட்டு வீட்டிற்குள் வந்தாலே கையை தூய்மையாக கழுவது அவசியம் என்கிறார். நோய் பாதித்தவர்கள் மாஸ்க் அணிவதால் பிறருக்கு அது பரவாது என்றும் நோய் தாக்கம் இல்லாதவர்களுக்கு மூச்சுக் காற்று மூலம் பரவுகிறது. ஆகவே மாஸ்க் போடுகிறோம் என நினைக்கிறார்கள். இது காற்று மூலம் பரவாது. நோயாளிகள் பயன்படுத்தும் பொருளை நாம் பயன்படுத்தும் போது அதன் வழியே நம் கைகளுக்கு வந்து அது அப்படியே நம் வாய் மற்றும் மூக்கு போன்ற பகுதிகளை தொடுவதால் உள்ளே சென்று விடுகிறது. அதை தடுக்கத்தான் மாஸ்க். காற்றில் பரவுவதால் அல்ல என்கிறார்.
இதனிடையே, மருந்துக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மாஸ்க் விலை விர்ர்ர் என்று ஏறியுள்ளது. 50 காசுக்கு வாங்கப்பட்ட மாஸ்க் விலை இன்று 5 ரூபாய் ஆகியுள்ளது என்கிறார் மருத்துவர் ரவிக்குமார். அதே போல் பல்லாவரம் பகுதியில் மருந்துக்கடை நடத்தி வருபவர் ஒருவர் ஒரு மாஸ்க் கடையில் தற்போது 15 முதல் இருபது ரூபாய் வரை விற்பனையாகிறது என்கிறார். அதற்கே சப்ளே இல்லை என்கிறார். சாதாரணமாக சந்தையில் கிடைத்தாலும் கொரோனா அச்சத்தை முதலீடாக வைத்து பலர் காசு சம்பாதிக்கிறார்கள் என்கிறார் அசோக் நகர்வாசி தர்மராஜ்.
இதற்கே மாஸ்க் ஏற்றுமதிக்கு அரசு தடை விதித்துள்ளது. அதே போல் பாராசிட்டமல் போன்ற ஆண்டி பயாடிக் மருந்துகள் ஏற்றுமதிக்கு தடை செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் மாஸ்க் போன்ற அத்தியாவசிய பொருள்களை இப்படி கொள்ளை விலைக்கு விற்பது சரியா என்கிறார் பம்மல் பகுதியில் வசிக்கும் நாராயணன்.