‘குஞ்சன் சக்சேனா தி கார்கில் கேர்ள்’ திரைப்பட விவகாரத்தில் குஞ்சன் சக்சேனாவின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.
இந்திய விமானப் படையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்ட “குஞ்சன் சக்சேனா தி கார்கில் கேர்ள்” என்கிற திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 12-ந் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியானது. இந்த படம் பாலின பிரச்னைகளை சுட்டி காட்டுவதாகவும், இந்திய விமானப்படையை மோசமாக சித்தரித்து உள்ளதாகவும் குற்றம் சாட்டிய மத்திய அரசு, படத்துக்கு தடை விதிக்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ராஜீவ் ஷக்தர், ‘படம் ஏற்கெனவே வெளியாகி விட்டதால் தற்போது தடை உத்தரவு வழங்க முடியாது' என்று கூறிய அவர், இந்த படம் முன்னாள் விமானப்படை லெப்டினன்ட் குஞ்சன் சக்சேனா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படம் என்பதால், அவரையும் வழக்குக்கு உட்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரான குஞ்சன் சக்சேனாவிடம், படத்தில் இந்திய விமானப் படையை மோசமாக சித்தரித்து உள்ளதாக எழுப்பப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு தொடர்பாக தனது நிலைப்பாட்டை தெரிவிக்க கேட்டுக் கொண்டார்.
மேலும் பட தயாரிப்பு நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் ஏதேனும் மீறல் இருக்கிறதா என்றும் சக்சேனாவிடம் நீதிபதி கேட்டார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 15 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.