எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யாததற்காக காவலரை சாலையை சுத்தம் செய்ய சொல்லி, கர்நாடகாவின் குல்பர்கா உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி குல்பர்கா நகரில் உள்ள பஜார் காவல் நிலைய அதிகாரி சாலையை சுத்தம் செய்ய உள்ளார்.
அதே பகுதியை சேர்ந்த தாராபி என்ற பெண் கடந்த அக்டோபர் 20-இல் தனது மகனை காணவில்லை என ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த விசாரணையின்போது காவல்துறையினர் அது குறித்த முதல் தகவல் அறிக்கையையோ அல்லது காவல் நிலைய பதிவேட்டிலோ பதிவு செய்யவில்லை என்பதை அறிந்து கொண்ட நீதிபதிகள் சுனில் டட்டா மற்றும் கிருஷ்ணா பாட் அடங்கிய அமர்வு சம்மந்தப்பட்ட காவல் துறை அதிகாரியை நேரில் ஆஜராகும்படி கேட்டுள்ளனர்.
இந்நிலையில் காவல்துறை அதிகாரி சார்பில் சட்ட ஆலோசகர்கள் தவறு செய்தமைக்காக சமூக பணியை செய்ய தயார் என நீதிமன்றத்தில் சொல்லியுள்ளனர். அதன்படி காவல் நிலையம் அமைந்துள்ள சாலையை சுத்தம் செய்ய காவலருக்கு உத்தரவிட்டனர். அதோடு பணியில் ஆக்டிவாக இல்லாதவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உயர் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.