தேவையற்ற திட்டங்களுக்கு செலவு செய்வதற்கு பதிலாக தடுப்பூசிகள், ஆக்ஸிஜன் உள்ளிட்ட சேவைகளில் கவனம் செலுத்துமாறு மத்திய அரசிடம் ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் அவரது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டதாவது “ தேவையற்ற திட்டங்களுக்கு செலவு செய்வதற்கு பதிலாக தடுப்பூசிகள், ஆக்ஸிஜன் மற்றும் பிற சுகாதார சேவைகளில் கவனம் செலுத்துமாறு மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம். இந்த நெருக்கடி வரும் நாட்களில் தீவிரமடையும். இதை சமாளிக்க நாடு தயாராக இருக்க வேண்டும். தற்போதைய அவலநிலை தாங்க முடியாதது” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடுகள் குறித்த வழக்கு விசாரிக்கப்பட்ட நிலையில், டெல்லி அரசு ஆக்சிஜன் தட்டுப்பாடு சரிசெய்யப்படவில்லை என்றால் நிலைமை மோசமாகும் என்றது. அதனைத்தொடர்ந்து நீதிபதிகள் இது குறித்து கேள்வி எழுப்பிய போது, பதிலளித்த மத்திய அரசு, வரும் காலங்களில் கொரோனாவின் கோரத்தாண்டவம் மிக மோசமாக மாறும் என்றும் இதனை மக்களை பயமுறுத்த கூறவில்லை இதுதான் நிதர்சனம் என்றும் கூறியது.