நீதிபதிகள் அனிருத்தா போஸ் மற்றும் ஏ.எஸ்.போபண்ணா ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் மீண்டும் பரிந்துரைத்துள்ளது.
ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அனிருத்தா போஸ் மற்றும் கவுஹாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ்.போபண்ணா ஆகிய இருவரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கடந்த ஏப்ரல் மாதம் 12ம் தேதி பரிந்துரை அளிக்கப்பட்டிருந்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான நீதிபதிகள் தேர்வு அமைப்பான கொலிஜியம் இப்பரிந்துரையை அளித்திருந்தது. ஆனால் பணி மூப்பு உள்ளிட்டவற்றை காரணம் காட்டி இப்பரிந்துரைகளை ஏற்க மறுத்த மத்திய அரசு, வேறு பெயர்களை பரிந்துரைக்க கொலிஜியம் அமைப்புக்கு அறிவுறுத்தியிருந்தது.
ஆனால் ஏற்கெனவே தாங்கள் கூறிய நீதிபதிகள் அனிருத்தா போஸ் மற்றும் ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் பெயரையே கொலிஜியம் மீண்டும் பரிந்துரைத்துள்ளது. பணி மூப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கவனமாக ஆராய்ந்த பிறகே மீண்டும் அதே பெயர்களை பரிந்துரைத்துள்ளதாகவும் கொலிஜியம் தெரிவித்துள்ளது. கொலிஜியம் குறிப்பிட்ட நீதிபதிகளின் பெயரை 2வது முறையாக பரிந்துரைத்துள்ளதால் இதை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது. இதற்கிடையில் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி பூஷண் ராமகிருஷ்ண கவாய் மற்றும் இமாசலப்பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் ஆகியோரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் 31 நீதிபதி பணியிடங்கள் உள்ள நிலையில் இதில் 27 பேர் மட்டுமே உள்ளனர். 4 இடங்கள் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.