இந்தியாவில் கடந்த ஒரு வருடத்தில் 500 ரூபாய் கரன்சியில் கள்ள நோட்டுகளின் புழக்கம் 31 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் ஒட்டுமொத்தமாக பார்த்தால் கள்ள நோட்டு புழக்கமானது இந்தியாவில் 29.7 சதவிகிதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கில் கடந்த 2016இல் அறிமுகம் செய்யப்பட்ட புதிய 500 ரூபாய் கரன்சிக்கு தான் இந்த சிக்கல் எழுந்துள்ளது.
கடந்த மூன்று நிதியாண்டுகளில் இந்த 500 ரூபாய் கரன்சியில் போலி நோட்டுகளின் புழக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. 2019 - 20 நிதியாண்டில் 25.4 சதவிகிதமாக இருந்த போலி 500 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் 2020 - 21 நிதியாண்டில் 31.1 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின் படி சுமார் 25.3 கோடி ரூபாய் மதிப்புள்ள 2,87,404 போலி ரூபாய் நோட்டுகள் கடந்த 2019இல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டை காட்டிலும் 11.7 சதவிகிதம் அதிகமாகும்.