மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் சாரதா சிட் ஃபண்ட் மற்றும் ரோஸ்வேலி நிதி நிறுவன முறைகேடு விவகாரங்கள் மீண்டும் சூடுபிடித்துள்ளன.
இந்தியாவின் மிகப்பெரிய நிதி நிறுவன மோசடிகள் பட்டியலில் சாரதா, ரோஸ்வேலி முறைகேடுகளுக்கு முக்கிய இடம் உண்டு. மேற்கு வங்கத்தில் தற்போது நடைபெற்று வரும் பிரச்னையின் பின்னணியில் சாரதா சிட் ஃபண்ட் மற்றும் ரோஸ்வேலி நிதி நிறுவன முறைகேடு வழக்கு தான் உள்ளது.
சாரதா சிட் ஃபண்ட் நிறுவனம் மேற்கு வங்கத்தில் 239 தனியார் நிறுவனங்களின் கூட்டு நிறுவனமாக 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தங்கள் திட்டங்களில் முதலீடு செய்தால் பெரும் லாபம் கிடைக்கும் எனக் கூறி லட்சக்கணக்கான சாமானிய மக்களிடம் இருந்து பெரும் தொகையை சாரதா நிறுவனம் வசூலித்தது. அவ்வாறு சுமார் 17 லட்சம் பேரிடமிருந்து 4 ஆயிரம் கோடி ரூபாய் வரை திரட்டிய நிலையில், அதன் முறைகேடுகள் 2013ம் ஆண்டு அம்பலமாகியது. அதைத்தொடர்ந்து நிறுவனமே மூடப்பட்டது. இது முதலீட்டாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சாரதா நிறுவன தலைவர் சுதிப்தோ சென் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் அவர் அளித்த வாக்குமூலத்தில் நிதிமுறைகேட்டில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் சிலருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறிய தகவல் வெளியானது. இவ்வழக்கில் மேற்கு வங்க அமைச்சர் மதன் மித்ரா, முன்னாள் டிஜிபி ரஜத் மஜும்தார், எம்பிக்கள் இருவர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சாரதா நிறுவன மோசடியைத் தொடர்ந்து இதேபோல செயல்பட்ட வந்த ரோஸ்வேலி என்ற நிறுவனமும் முறைகேடுகள் செய்ததாக தகவல்கள் வெளியாகின. இதில் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் வரை மோசடி நடந்ததாக கூறப்படுகிறது. அதன் தலைவர் கவுதம் குன்டு 2015 ம் ஆண்டு கைது செய்யப்பட்ட நிலையில் வழக்கு விசாரணை தற்போது வரை நடந்து வருகிறது.
இந்த சூழலில் இவ்விரு வழக்குகளையும் விசாரித்த மாநில அரசின் சிறப்பு விசாரணை குழுவுக்கு தலைவராக இருந்தவர் தான் தற்போதைய கொல்கத்தா காவல் ஆணையர் ராஜிவ் குமார். இவர் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக நடந்துகொண்டதாகவும் முக்கிய ஆவணங்களை அழித்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு இவர் மீதும் வழக்கு தொடரப்பட்டது.
இதன் பின்பே இவ்விரு வழக்குகளும் 2014-ம் ஆண்டு சிபிஐக்கு மாற்றப்பட்டன. மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் இவ்வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது. சாரதா மற்றும் ரோஸ் வேலி நிதி நிறுவனங்கள் முறைகேடு விவகாரம் நாட்டிலேயே மிகப்பெரிய அளவிலான நிதி நிறுவன மோசடிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.