உத்திர பிரதேச மாநிலத்தில் சுமார் 9 வயதுடைய சிறுவன், 20 அடி உயரத்திலிருந்து நாய்குட்டியை வீசும் காட்சியானது சமூக வலைதளத்தில் வைரலானதை அடுத்து அச்சிறுவனின் தந்தை மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டா கவுர் நகரில், அந்த சிறுவன் , தான் வசிக்கும் பகுதியில் உள்ள புதரில் இருந்து எடுத்த நாய் குட்டி ஒன்றினை 20 அடி கட்டிட உயரத்தில் இருந்து வீசும் காட்சி வெளியாகியுள்ளது. இக்காட்சிகள் காண்போரை பதைபதைக்க வைக்கிறது.
இதனை கண்ட சிறுவனின் தந்தை அவனை தடுக்காமல் சிறுவனின் செயலை வீடியோ எடுத்துள்ளார். அதுமட்டுமல்லாது அதனை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து இதனை சமூக வலைதளத்தில் பகிர்ந்த சிறுவனின் தந்தையின் மீது People For Animals என்ற அமைப்பின் தன்னார்வலர் சுர்பி ராவத் புகார் அளித்துள்ளார்.
இதனால் சிறுவனின் தந்தையின் மீது IBC SECTION 429 மற்றும் விலங்குகள் வதை தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
இது குறித்து பிஸ்ராக் காவல் நிலையத்தின் SHO கூறுகையில்,
” சிறுவனின் தந்தை அவன் செய்வதை வீடியோ எடுத்துள்ளார். அதுமட்டுமல்லாது அதனை சமூக வலைதளத்திலும் பகிர்ந்துள்ளார். சிறுவனின் செயலை கண்ட தந்தை நிச்சயம் அவனை தடுத்திருக்கவேண்டும். இது குறித்து அவரிடம் கேட்டதற்கு அவன் நாய்குட்டியை கைகளில் வைத்து விளையாடி கொண்டுதான் இருந்தான். அதன்பிறகுதான் மேல் இருந்து தூக்கி வீசியதை எறிந்தான் என்று தெரிவித்தார்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் புகார் அளித்த தன்னார்வலர் இது குறித்து தெரிவிக்கையில், “நாய்குட்டி மேலிருந்து வீசப்பட்ட உடனே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. ஆனால் அங்கு வசிக்கும் மக்கள் நாய்குட்டி உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கிறார்கள். மேலும் அப்பகுதியில், தெருநாய்களை பேணி வளர்க்கும் பிரியங்கா என்னும் பெண் இது குறித்து கேட்டதற்கு அவரை தாக்கியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சிறுவனின் தந்தையின் மீது FIR பதிவு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து , அப்பகுதி மக்கள் தெருநாய்களை அப்பகுதியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று போராட்டம் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.