கோவா மாநிலத்தை சேர்ந்த 10 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாரதிய ஜனதா கட்சியில் முறைப்படி இணைந்தனர்.
முன்னதாக காங்கிரஸிலிலிருந்து விலகிய 10 எம்எல்ஏக்களையும் முதல்வர் பிரமோத் சாவந்த் டெல்லிக்கு அழைத்து சென்றார். கட்சித் தலைவர் அமித் ஷா, செயல் தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டா முன்னிலையில் 10 பேரும் பாஜகவில் இணைந்தனர். பாஜகவில் தற்போது 10 எம்எல்ஏக்கள் இணைந்துள்ள நிலையில் அவர்களில் சிலருக்கு வாய்ப்பளிப்பதற்காக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இணைந்ததை அடுத்து 40 உறுப்பினர்கள் கொண்ட கோவா பேரவையில் பாஜகவின் பலம் 27 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையில், தங்கள் எம்எல்ஏக்களை இணைத்துக் கொண்ட பாஜகவின் செயல் ஜனநாயக படுகொலை என காங்கிரஸ் சாடியுள்ளது.
கர்நாடகா மற்றும் கோவாவில் கட்சிகளை உடைக்கும் பாரதிய ஜனதாவின் செயல்களை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.