‛‛Thank you for thinking of me'' என ரத்தன் டாடா போட்ட கடைசி இன்ஸ்டா பதிவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.. அவர் எழுதிய வார்த்தைகள் தான் அனைவரையும் உருக வைத்துள்ளது..
இந்தியாவின் பிரபல தொழிலதிபரும், டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா வயது முதிர்வு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வந்துள்ளனர் மருத்துவர்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார் ரத்தன் டாடா.
ரத்தன் டாடாவின், மறைவுக்கு அரசியல்வாதிகள் முதல் அடிப்படை வசதி இல்லாமல் தவித்து வரும் ஏழை மக்கள் வரை இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தொழிலில் கொடிகட்டி பறந்தது மட்டுமின்றி ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து அவர்களின் மனதிலும் நீங்க இடம் பிடித்தவர் ரத்தன் டாடா.
இந்நிலையில் தான், ரத்தன் டாடா கடைசியாக போட்ட இன்ஸ்டகிராம் பதிவை நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.
கடந்த 7 ஆம் தேதி, ரத்தன் டாடா உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும், அவர் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார் எனவும் தகவல் பரவியது.
பின்னர், இந்த தகவலை தொடர்ந்து ரத்தன் டாடா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார், அதில், ‛‛எனது உடல்நலம் தொடர்பாக வதந்திகள் பரவி வருகின்றன. இதனை நான் அறிந்துள்ளேன். இந்த தகவல்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். எனது வயது மற்றும் உடல்நிலை சார்ந்து வழக்கமான பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளேன். என்னை நினைத்து கவலைப்பட வேண்டிய தேவை இல்லை. நான் நலமாக இருக்கிறேன். தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம்'' என கூறியிருந்தார்.
அதுமட்டுமின்றி இந்த அறிக்கைக்கு மேலே ‛‛Thank you for thinking of me'' அதாவது "என்னை நினைத்ததற்கு நன்றி" என்றும் வெள்ளை நிற இதயத்தின் இமோஜையும் பதிவிட்டிருந்தார். இந்தநிலையில் தான் ரத்தன் டாடா நேற்று உயிரிழந்தார். இனிமேல் அனைவரின் நினைவில் மட்டுமே அவர் இருப்பார் என்பதால் அவரின் கடைசி இன்ஸ்டா பதிவை அனைவரும் பகிர்ந்து வருகின்றனர்.'