TET எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் ஆயுள் காலம் வரை செல்லுபடியாகும் என தேசியக் கல்விக் குழுமம் தெரிவித்துள்ளது. இருப்பினும் புதிய நடைமுறையை அமல்படுத்துவதற்கு முன் சட்ட ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் எனவும் தெளிவுபடுத்தியுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் என்ற விதிமுறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் இச்சான்றிதழ் ஆயுள்காலம் முழுவதும் செல்லுபடியாகும் வகையில் மாற்றம் செய்ய அண்மையில் நடந்த தேசிய ஆசிரியர் கல்விக்குழும பொதுக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இதன் மூலம் வரும் நாட்களில் தேர்வெழுதி வெற்றி பெறுவோருக்கும், ஏற்கெனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றோருக்கும் வழங்கப்படும் சான்றிதழ் ஆயுள் காலம் வரை செல்லுபடியாகும். எனினும் இந்த புதிய விதிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கு முன் சட்ட ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் எனவும் தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் தெரிவித்துள்ளது.
2012ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், சுமார் 80,000 ஆசிரியர்கள் இத்தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் செல்லுபடியாகும் காலத்தை நீட்டிக்கக்கோரும் நிலையில் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.