விமானம், ரயில் நிலையங்களில் ரசாயன தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டி இருப்பதாக மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில், ஆஸ்திரேலியாவில் விமானத்தில் ரசாயன தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் தீட்டிய சதி முறியடிக்கப்பட்டது. அதேபோன்று, இந்தியாவில் விமானம், ரயில்களில் ரசாயன தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.ரசாயன பவுடர், பூச்சிக்கொல்லி மருந்து, திராவகம் போன்ற பொருட்களை பயன்படுத்தி கொடிய நச்சு வாயுக்களை உருவாக்கி தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இப்பொருட்களை மருந்துகள், குளிர் பானங்கள், வீட்டை சுத்தப்படுத்தும் பொருட்கள் என்ற போர்வையில் விமானம் மற்றும் மெட்ரோ ரயிலுக்குள் எடுத்துச்சென்று நச்சு வாயுக்களை உருவாக்க முடியும். எனவே, பயணிகளின் உடைமைகளை சோதனை செய்யும் பொறுப்பில் உள்ள அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும் இத்தகைய பொருட்களை கண்டறிந்து தடுக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்பு அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த விஷயத்தில், மாநில அரசுகள் எச்சரிக்கையாக இருக்குமாறு அனைத்து மாநில போலீஸ் டி.ஜி.பி.க்களையும் மத்திய உளவுத்துறை உஷார்படுத்தி உள்ளது.
இதையடுத்து, தமிழ்நாட்டில் விமானம், ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.