மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட, இந்தியாவால் தேடப்பட்டு வரும் ஹபீஸ் சையத்துக்கு 5 ஆண்டு கால சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதீமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டில் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு ஹபீஸ் சையத் மற்றும் அவரின் கூட்டாளிகள் 4 பேர் பாகிஸ்தான் போலீசால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்ட போதும் நீதிமன்றத்தால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். பல்வேறு உலக நாடுகள் அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், ஹபீஸ் சையத்துக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வந்தன.
பாகிஸ்தானின் தீவிரவாத எதிர்ப்பு அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட இந்த வழக்கில் பல்வேறு தரப்பு வாதங்களுக்கு பிறகு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்தல், தடை செய்யப்பட்ட இயக்கத்தில் இருத்தல் போன்ற குற்றச்சாட்டுகள் நிரூபணமாகி ஐந்து வருடம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.