ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் தனமண்டி பகுதியில் ராணுவ வீரர்கள் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, தனமண்டி - சூரன்கோட் சாலை சவ்னி பகுதியில் உள்ள ரஜோரி செக்டாரில் இரண்டு ராணுவ வாகனங்கள் மீது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 3 வீரர்கள் காயமடைந்துள்ளனர். பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இந்திய ராணுவ வீரர்களும் உடனடியாக பதிலடி கொடுத்தனர். நேற்று மாலை முதல் அப்பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிரான கூட்டு நடவடிக்கையை ராணுவத்தினர் வலுப்படுத்தி உள்ளனர்.
48 ராஷ்டிரிய ரைபிள்ஸ் பகுதியில் இந்த நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஆயுதமேந்திய போலீஸ் பிரிவு வளாகத்தில் நேற்று, வெடிவிபத்து நடந்ததை அடுத்து இந்த சம்பவம் நடந்துள்ளது. சூரன்கோட் பகுதியில் டிசம்பர் 19 மற்றும் 20 ஆம் தேதி இடைப்பட்ட இரவில் ஏற்பட்ட வெடிவிபத்தில் வளாகத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த சில வாகனங்களின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.