பயங்கரவாதத்தால் உலக பொருளாதாரத்தில் 70 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பிரிக்ஸ் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட பிரிக்ஸ் கூட்டமைப்பின் 11-ஆவது மாநாடு பிரேசிலில் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரேசில் சென்றிருந்தார். பிரேசிலியா நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் அவர் பங்கேற்று உரையாற்றினார். பிரிக்ஸ் நாடுகளின் தொழில் துறை தலைவர்கள் மாநாட்டில் பேசிய மோடி, உலகிலேயே முதலீட்டுக்கு உகந்த சூழல் இந்தியாவில் நிலவுவதாகக் கூறினார். இதைத்தொடர்ந்து, பிரேசிலியாவின் பழமையான இட்டாமராடி அரண்மனையில் நடைபெற்ற பிரிக்ஸ் வர்த்தக கவுன்சில் கூட்டத்திலும் மோடி பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது, சர்வதேச நாடுகளின் அமைதி, வளர்ச்சி மற்றும் வளங்களுக்கு பயங்கரவாதம் அச்சுறுத்தலாகத் திகழ்வதாக அவர் கூறினார். உலக அளவில் அதிகரித்து வரும் பயங்கரவாதத்தால், வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 1.5 சதவிகிதம் குறைந்துவிட்டதாக மோடி சுட்டிக்காட்டினார். பயங்கரவாதத்தால் உலக பொருளாதாரத்தில் 70 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக பிரதமர் கவலை தெரிவித்தார். மேலும், பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே தகவல்தொடர்புகள், பாதுகாப்புத்துறை ஒத்துழைப்புகள் ஆகியவற்றை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர் மோடி, அதன் மூலம் பயங்கரவாதத்தை வீழ்த்த முடியும் என்று யோசனை தெரிவித்தார்.
மாநாட்டின் இடையே, சீன அதிபர் ஷி ஜின்பிங், பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனாரோ, ரஷ்ய அதிபர் புதின், தென் ஆப்பிரிக்கா அதிபர் சிரில் ஆகியோரை, பிரதமர் மோடி தனித்தனியே சந்தித்துப் பேசினார். சீன அதிபருடனான சந்திப்பின்போது, இரு நாட்டு எல்லைகள் குறித்து அடுத்தகட்ட பேச்சு நடத்துவது குறித்து விவாதித்தார். ரஷ்ய அதிபர் புதினுடனான சந்திப்பின்போது, அதிநவீன எஸ் 400 ரக ஏவுகணைகளை வாங்குவது குறித்து மோடி ஆலோசனை நடத்தினார். பிரிக்ஸ் மாநாடு மற்றும் அயல்நாட்டுத் தலைவர்களுடனான சந்திப்புகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி இந்தியா புறப்பட்டார்.