பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் பதவி காலம் வரும் ஜூன் மாதம், 2024-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் ஜன்பத்தில் உள்ள என்.டி.எம்.டி அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த ஆண்டு வரவிருக்கும் ஒன்பது மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து இரண்டு நாள் கூட்டமான இதில் விவாதிக்கப்பட்டது.
மேலும் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்கள், அந்த மாநிலத்தில் உள்ள அரசியல் நிலவரம் குறித்து செயற்குழுக் கூட்டத்தில் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன. அத்துடன் இன்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் பதவிக் காலம் நீட்டிப்பு தொடர்பான தீர்மானத்தை முன்மொழிந்தார்.
இந்த முடிவுக்கு மற்ற உறுப்பினர்கள் முழு மனதாக ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து ஜேபி நட்டாவின் பதவிக்காலம் வருகிற ஜூன் மாதம் 2024 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் நாள் கூட்டதிற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நாட்டாவின் பதவி காலம் 2024 ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக செயற்குழு கூட்டதில் ஒருமனதாக முடிவு செய்யபட்டு, ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.
மேலும் பேசிய அவர், “இம்முடிவின் மூலம் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது மோடி மற்றும் நட்டா தலைமையில், பாஜக அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். மீண்டும் மோடியே தேசத்தின் பிரதமராக வழி நடத்துவார்” என தெரிவித்துள்ளார். இதன்மூலம் பாஜக தரப்பில் 2024 ஆம் ஆண்டு தேர்தலிலும் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மீண்டும் பிரதமர் நரேந்திர மோடியே களம் இறங்குகிறார் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.