உத்தரப் பிரதேச மாநில எல்லையில் விவசாயிகள் போராட்டம் தொடரும் நிலையில், ஆயிரக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் காசிப்பூர் எல்லையில் விவசாயிகள் ஏராளமானோர் போராட்டத்தை தொடரும் நிலையில், விவசாயிகள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் எனவும், இல்லையேல் அகற்றப்படுவர் எனவும் அம்மாநில அரசு நேற்று மாலை எச்சரிக்கை விடுத்தது.
இதனால் பத்ற்றமான சூழல் ஏற்பட்டதை அடுத்து போராட்டப் பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். பாரதிய கிசான் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத், நாங்கள் எங்கும் செல்லமாட்டோம் காவல்துறை என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளட்டும் என இரவில் அறிவித்தார்.
இதற்கிடையே மற்ற எல்லைகளில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளும் காசியாபாத் எல்லையில் குவிந்தனர். அங்கு மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இதேபோல் டெல்லி - அரியானாவை இணைக்கும் சிங்கு பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளின் போராட்டத்தை தடுக்கும் வகையில் அங்குள்ள முக்கிய சாலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் 5 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. மேலும் சாலையில் பல இடங்களில் கான்கிரீட் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.