அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை வரவேற்பதற்காக அமைக்கப்பட்ட அலங்கார வளைவு, காற்றின் வேகத்தில் சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நாளை இந்தியா வருகிறார். அவரின் பயணத் திட்டத்தின்படி குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு முதலில் செல்கிறார். அங்குள்ள சர்தார் வல்லபாய் படேல் விளையாட்டு மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் அவரும் பிரதமர் மோடியும் பேசுகிறார்கள். ட்ரம்ப் செல்லவிருக்கும் நகரங்கள் அனைத்தும், ட்ரம்பை வரவேற்கும் விதமாக விழாக்கோலம் பூண்டுள்ளது.
சாலையோரங்களில் வரவேற்பு பேனர்கள், இரு நாட்டு கொடிகள், சுவர் ஓவியங்கள், தற்காலிக அலங்கார வளைவுகள் என பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் சர்தார் வல்லபாய் படேல் விளையாட்டு மைதானம் செல்லும் வழியில் அமைக்கப்பட்ட அலங்கார வளைவு ஒன்று, காற்றின் வேகத்தில் சரிந்து விழுந்தது. அலங்கார வளைவு விழும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
முக்கியத் தலைவர்களின் சந்திப்பு என்பதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அலங்கார வளைவு சரிந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.