பொது இடங்களில் பிராந்திய மொழி பேசுபவர்களிடையே இந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளை திணிக்கும் செயல்பாடுகள் இந்தியாவில் தொடர்ந்து அரங்கேறி வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதற்கு எதிராக அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள், மொழி பற்றாளர்கள் பலரும் விமர்சித்தும், கருத்து தெரிவித்தும் வருகிறார்கள்.
இந்த நிலையில், விஜயவாடாவில் இருந்து ஐதராபாத்திற்கு செல்லும் இண்டிகோ விமானத்தில் பயணித்த பெண் ஒருவருக்கு இந்தியும், ஆங்கிலமும் தெரியாத ஒரே காரணத்திற்காக அவர் புக் செய்த ஜன்னலோர இருக்கையை விமான ஊழியர் மாற்றிய சம்பவம் தொடர்பான ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி பலரது கண்டனங்களையும் பெற்றிருக்கிறது.
அதன்படி தேவஸ்மிதா சக்ரவெர்தி என்ற சகப் பயணி இண்டிகோ விமானத்தில் நடந்த சம்பவத்தை ட்விட்டர் பதிவிட்டிருக்கிறார். அதில், “ஆந்திராவின் விஜயவாடாவில் இருந்து தெலங்கானா ஐதாபாத்திற்கு கடந்த செப்டம்பர் 16ம் தேதி சென்ற இண்டிகோ விமானத்தில் 2A (XL seat, exit row) பயணிக்க இருந்த பெண்மணிக்கு இந்தி, ஆங்கிலம் என இரண்டு மொழியும் தெரியாததால் 3C இருக்கையில் விமான ஊழியர் அமர வைத்திருக்கிறார். ” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவை டேக் செய்து இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்றும், இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் பிராந்திய மொழிகளிலும் அறிவிப்புகளை வெளியிடும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அப்பெண் கோரியுள்ளார்.
இதனை பகிர்ந்த தெலங்கானா தகவல் தொழில்நுட்பம், நகர்ப்புற மேம்பாடு, தொழில்கள் மற்றும் வர்த்தகத் துறையின் அமைச்சராக இருக்கக் கூடிய கே.டி.ராமாராவ், “இண்டிகோ நிறுவனம் பிராந்திய மொழி தெரிந்தவர்களையும் வேலைக்கு அமர்த்த வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.