உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவாக கருதப்படும் ஒலிம்பிக் போட்டி, பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த ஜூலை 26ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்த போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை நிரூபித்து வருகின்றனர்.
இந்தியா சார்பில், 117 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 13 பேரும் இடம்பிடித்துள்ளனர். இந்நிலையில், இந்தப் போட்டியின் தொடக்க விழாவில் கலந்துகொள்வதற்காக தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவியும் தனது மனைவி சுரேகாவுடன் பாரீஸ் சென்றிருந்தார்.
பின்னர், அவர் நாடு திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் அவரது ரசிகர் (விமான நிறுவன ஊழியர்) ஒருவர் சிரஞ்சீவியிடம் செல்பி எடுக்க விரும்பினார். அதற்காக அவர் அருகில் சென்று செல்பி எடுக்க முயல்கிறார். ஆனால், சிரஞ்சீவி ஏதோ சொல்லிவிட்டு, அவரை தள்ளுகிறார். இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த வீடியோவுக்கு எதிராகவும் கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன.
முன்னதாக, கடந்த ஜூன் மாத இறுதியில், தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜுனாவை விமான நிலையத்திற்குள் இருந்த ரசிகர் ஒருவர் அவரை சந்திக்க முயன்றார். ஆனால், நாகார்ஜுனாவின் பாதுகாவலர் அந்த நபரை பிடித்து தள்ளிவிட்டார்.
இதனை நடிகர் நாகார்ஜுனா கண்டுகொள்ளாமல் அங்கிருந்து சென்றதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. பின்னர், அந்த வீடியோ வைரலானதை அறிந்த நாகார்ஜுனா அந்த நிகழ்வுக்காக தனது எக்ஸ் தளத்தில் மன்னிப்பு கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.