ஹைதராபாத்துக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடியை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வரவேற்க செல்லாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள 216 அடி உயர ராமானுஜர் சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை திறந்து வைத்தார். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஹைதராபாத் விமான நிலையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தார். அவரை அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், மத்திய சுற்றுலா துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, தெலங்கானா அமைச்சர் தலாசனி ஸ்ரீநிவாஸ் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
ஆனால், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பிரதமரை வரவேற்க செல்லவில்லை. இது, அம்மாநில அரசியல் களத்தில் மட்டுமல்லாமல் தேசிய அரசியலிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சில தினங்களுக்கு முன்புதான் பிரதமர் நரேந்திர மோடியை தனிப்பட்ட முறையில் சந்திரசேகர ராவ் கடுமையாக விமர்சித்திருந்தார். இதன் காரணமாகவே, பிரதமர் மோடியை அவர் வரவேற்க செல்லவில்லை என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் சர்ச்சை ஆனதை அடுத்து, தெலங்கானா முதல்வர் அலுவலகம் ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டது. அதில், "முதல்வர் சந்திரசேகர ராவ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவேதான், பிரதமரை முதல்வர் வரவேற்க செல்லவில்லை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.