செல்ஃபோன் நிறுவனங்கள் ஆதாரை பயன்படுத்த கூடாது என்ற நீதிமன்ற உத்தரவால் சிம் கார்டு நிறுவனங்கள் பெரும் சிக்கலுக்கு ஆளாகியுள்ளது.
அரசின் திட்டங்களை பெற ஆதார் அவசியம் என்றும் அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும் என உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் 26ம் தேதி அதிரடியான தீர்ப்பை வழங்கியது. அத்தோடு, எந்தெந்த விவகாரங்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம் அவசியம் இல்லை என்பது குறித்தும் உச்சநீதிமன்றம் தமது தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டது. வங்கிக் கணக்குகள் துவங்க, மொபைல் எண்கள் பெறுவதற்கு, சிபிஎஸ்இ, நீட் போன்ற எந்த ஒரு தேர்வுகளுக்கும், பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கும் ஆதார் அட்டை அவசியம் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் கூறியது. இந்நிலையில் சிம் கார்டு நிறுவனம் ஆதார் எண் வாங்குவதை நிறுத்துவதற்கான திட்டம் குறித்து பதில் அளிக்குமாறு தொலைத் தொடர்பு நிறுவனங்களை ஆதார் ஆணையம் (UIDAI) கேட்டுக்கொண்டது. மேலும் அக்டோபர் 15ம் தேதிக்குள் பதிலளிக்குமாறும் வலியுறுத்தியது.
சிம்கார்டு வாங்க வழிமுறை என்ன ?
சிம்கார்டு வாங்க வேண்மென்றால் ஒரு படிவத்தில் நம்முடைய தகவல்களை நிரப்ப சொல்வார்கள். அடையாள அட்டை, முகவரிக்கான அட்டை ஆகியவற்றையும் ஒரு போட்டோவையும் கேட்பார்கள். எல்லாம் கொடுத்து சிம்கார்டு வாங்கினால் ஆக்டிவேட் ஆக 24 மணி நேரத்திற்கு மேலாகும். இதற்கிடையில் போன் செய்து, பெயர் மற்றும் முகவரி சரிதானா எனக் கேட்பார்கள். இதுதான் நடைமுறையாக இருந்து வந்தது. ஆனால், தற்போது ஆதார் எண்ணும், கைரேகையும் இருந்தால் போதும் சிம்கார்டு வாங்கிவிடலாம் என்ற நிலை உள்ளது. உடனடியாக சிம்கார்டு ஆக்டிவேட் ஆகிவிடும்.
இந்நிலையில் ஆதார் அல்லாமல் வேறு வழியில் செல்ஃபோன் வாடிக்கையாளர்களின் தகவல்களை சரிபார்க்கும் திட்டத்தை உருவாக்க கூடுதல் அவகாசத்தை மொபைல் ஃபோன் நிறுவனங்கள் கோரியுள்ளன. இது குறித்து இந்திய பிரத்யேக அடையாள எண் ஆணையத்துக்கு சிம் கார்டு நிறுவனங்கள் கடிதம் எழுதியுள்ளன. காகித ஆவணங்கள் அடிப்படையில் வாடிக்கையாளர் விவரங்களை சரிபார்ப்பது மிகவும் செலவு பிடிக்கும் விஷயம் என்பதுடன் நீண்ட தாமதத்தையும் ஏற்படுத்தும் என அவை கூறியுள்ளன. ஆதார் தகவல்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பயன்படுத்தக் கூடாது என அண்மையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் மாற்றுத்திட்டத்தை உருவாக்க அந்நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டன. இதற்கான அவகாசம் நேற்றுடன் முடிந்த நிலையில் கூடுதல் அவகாசம் கேட்டு அவை கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிம்கார்டு வாங்க மாற்று வழி என்ன?
தனி நபர்களின் ஆதார் விவரங்கள் பிறர் வசம் செல்லாமல் விவரங்களை சரிபார்க்கும் வகையிலான புதிய வசதிகளை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. மேலும் QR CODE உள்ளிட்ட ஆஃப்லைன் முறைகளில் ஆதார் தகவல்களை சரிபார்க்க அரசு மற்றும் தனியார் நிறுவனங்களை மத்திய அரசு அனுமதித்துள்ளது. தற்போது மொபைல் எண்கள் வாங்குவதற்கு ஆதார் எண் கட்டாயம் இல்லையென உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில், ஆதார் மூலமான சரிபார்ப்பு சாத்தியமற்றதாகி உள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எது போன்ற யுக்தியை முன்வைக்கப்போகின்றன என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.