ஊரடங்கு உத்தரவால் வெளியூரில் சிக்கித் தவித்த மகனை 1400 கி.மீ ஸ்கூட்டியில் பயணித்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் தெலங்கானா மாநிலம் நிஜாம்பாத்தை சேர்ந்த வீரத்தாய்.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் உள்ள மாவட்டங்களின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவைகளை தவிர வெளியே வரக்கூடாது என மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சொந்த ஊருக்கு செல்ல விரும்புவோர் முன் அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பல்வேறு மாநிலங்களில் வேலைப்பார்த்து வந்தவர்கள் வருமானம் இல்லை எனக்கூறி நடைபயணமாகவே சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருக்கின்றனர். இதில் பலர் விபத்துகளில் சிக்கியும் உடல்நலக்குறைவு ஏற்பட்டும் உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது. நாட்டின் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவால் மாட்டிக் கொண்ட பலர் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் உள்ளனர்.
அந்த வகையில், தெலங்கானா நிஜாம்பாத்தைச் சேர்ந்த நிஜாமுதீன் என்பவர் மருத்துவ பயிற்சிக்காக ஹைதராபாத் சென்றுள்ளார். அங்கிருந்து நண்பரின் ஊரான ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு சென்றுள்ளார். இதைத்தொடர்ந்துஊரடங்கு உத்தரவால் அவர் சொந்த ஊர் திரும்ப முடியாமல் அங்கேயே மாட்டிக்கொண்டார். இதனால் மகனை மீட்க முடிவெடுத்த அவரது தாயார் ரஜியா பேகம், போலீசிடம் அனுமதி பெற்று கடிதம் வாங்கிக் கொண்டு ஸ்கூட்டியில் பயணித்தார். 1,400 கி.மீ., ஸ்கூட்டியிலேயே பயணித்து பல்வேறு சோதனைச்சாவடிகளை கடந்து தன் மகனை பத்திரமாக வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.
ரஜியா பேகம் ஐதராபாத்திலிருந்து 200 கி.மீ தூரத்தில் உள்ள நிஜாமாபாத்தில் அரசுப் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக உள்ளார். 15 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்த ரஜியா பேகம், தனது இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். மூத்த மகன் பொறியியல் பட்டதாரி, மற்றும் 19 வயதான இளைய மகன் நிஜாமுதீன் மருத்துவம் படித்து வந்துள்ளார்.
இதுகுறித்து ரஜியா பேகம் கூறுகையில், “ஒரு சிறிய வண்டியில் பயணிப்பது பெண்ணுக்கு கடினமான விஷயம். ஆனால் எனது மகனை அழைத்து வர வேண்டும் என்ற எண்ணம் எனது அனைத்து வகையான பயத்தையும் போக்கியது. சாலைகளில் மக்கள் இல்லாத இரவுகளில் பயமாக இருந்தது. ஏப்ரல் 6 ஆம் தேதி காலை, பயணத்தைத் தொடங்கி மறுநாள் பிற்பகல் நெல்லூரை அடைந்தேன். பின்னர் என் மகனுடன் அதே நாளில் சொந்த ஊருக்குப் புறப்பட்டு புதன்கிழமை மாலை சொந்த ஊரை அடைந்தேன்” எனத் தெரிவித்தார்.