119 தொகுதிகளை கொண்ட தெலங்கானாவில் தற்போது பி.ஆர்.எஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சந்திரசேகரராவ் உள்ளார். இந்நிலையில் வரும் நவம்பர் 30 ஆம் தேதி இங்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று அதன் முடிவுகள் டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பி.ஆர்.எஸ், காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகள் இங்கு முக்கிய கட்சிகளாக களம் காண்கின்றன. இந்நிலையில் தெலங்கானாவில் செகந்திராபாத்தில் பாஜக ஏற்பாடு செய்திருந்த மடிகா சமூகத்தை சேர்ந்தவர்களுக்கான பொதுக்கூட்டத்தில் சமீபத்தில் (நேற்று முன்தினம்) பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது மற்ற கட்சிகளை விமர்சித்து பேசி வந்தார். இதைக்கேட்ட கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் மின்விளக்குகளுக்கென்று அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு கோபுரத்தில் திடீரென சடசட வென்று ஏற ஆரம்பித்தார்.
இதனை கண்ட அனைவரின் மனமும் பதைபதைக்கவே, அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பிரதமர் மோடி அப்பெண்ணிடம் “மகளே கீழே இறங்கி வா.. அங்கே ஷார்ட் சர்க்யூட் ஏற்படலாம். நான் உன் கோரிக்கையை என்னவென்று கேட்கிறேன். நான் உங்களுக்காகத்தான் இங்கு வந்துள்ளேன். நீ இப்படி செய்வதால் எந்த பயனும் இல்லை” என்று இந்தியில் வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து பலமுறை அப்பெண்ணை கீழே இறங்கி வர அழைத்தார்.
இதனை கேட்ட அப்பெண் ஒருகட்டத்தில் கீழே இறங்கி வந்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து பிறகு செய்தி நிறுவனங்களிடம் பேசிய அப்பெண் இதுகுறித்து கூறுகையில், “பிரதமர் மோடி பதவிக்கு வந்த பின்பு மக்கள் அனைவரும் சாதி மற்றும் மதத்தின் பெயரால் பிளவுபட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் கொலை மற்றும் பாலியல் வன்கொடுமைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மோடியின் ஆட்சியில் அனைத்து அரசு துறைகளும் தனியார் மயமாக்கப்பட்டு வருகின்றன.
எனவே என்னை போன்ற ஏழைகளுக்கு எதிலும் இடம் இருப்பது இல்லை. இந்தியாவை தவறாக வழிநடத்துகிறார் பிரதமர்” என்று பேசினார். இதையடுத்து இப்பெண் செய்த செயலும் பேசிய கருத்துகளும் இணையதளத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.