சுய ஊரடங்கை கடைப்பிடிக்கும் பழங்குடிகள்... தெலங்கானாவில் ஒரு அதிசய நடைமுறை
தெலங்கானா மாநிலத்தில் உள்ள அடிலாபாத், கேபி அசிபாபாத், முலுகு, கோதகுடெம் போன்ற மாவட்டங்களில் ஆண்டுதோறும் பருவகால நோய்களை எதிர்கொள்ளும் பழங்குடி மக்களுக்கு இந்த ஆண்டு கொரோனாவும் சேர்ந்துகொண்டது. அதனால் அவர்கள் சுய ஊரடங்கைக் கடைப்பிடித்து வருவதாக தி நியூஸ்மினிட் இணையதளம் செய்திக்கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மழைக்காலத்தில் மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் பழங்குடி பகுதிகளில் ஏற்படுவது வழக்கமாக இருக்கிறது. இந்த நிலையில், அவர்களது வாழ்வாதாரத்தையும் அன்றாட வாழ்க்கையையும் கொரோனா பெரிதும் பாதித்துள்ளது. நோய்த் தொற்றில் இருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள பழங்குடி மக்கள் சுய ஊரடங்கை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். மாவட்ட நிர்வாகமும் தடுப்பு நடவடிக்கைகளைச் செய்துவருகிறது.
தெலங்கானாவின் வடக்குப் பகுதியில் உள்ள நான்கு மாவட்டங்களில் வாழும் பழங்குடி மக்களுக்குத் தேவையான மருத்துவ சேவையை அடிலாபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி இன்ஸ்டிட்டிட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் செய்துவருகிறது. அதுதான் அந்தப் பகுதியில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையாக இருந்துவருகிறது.
"இங்கு கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் மிகக்குறைவாகவே இருக்கிறார்கள். ஆனால் அவர்களிடம் நோய்த் தொற்று பற்றிய பயமும் அக்கறையும் இருக்கிறது. சிறுநீரகக் கோளாறு, ஆஸ்த்மா, பிரசவம் போன்றவற்றுக்காக வருகிறார்கள்" என்கிறார் மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியர் டாக்டர் சுமலதா. "சிலர் மட்டும் காய்ச்சல் இருமலுடன் வருகிறார்கள். அவர்களிடம் நல்ல விழிப்புணர்வு இருக்கிறது" என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இந்த ஆண்டு பழங்குடி மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அவர்களுக்குள் ஊர்க்கூட்டங்களை நடத்தி சுய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர். தெலங்கானாவின் முலுகு மாவட்டத்தில் வாழும் பழங்குடி மக்கள் முழு முடக்கத்தை அமல்படுத்தியுள்ளனர். அடுத்த கிராமங்களுக்குக்கூட அவர்கள் செல்லாமல் கட்டுப்பாட்டுடன் இருந்துவருகிறார்கள்.