ஹைதராபாத்தில் எலெக்ட்ரிக் பைக் ஷோரூமில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி சென்னையை சேர்ந்தவர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அடுத்த செகந்திராபாத் பகுதியில் எலெக்ட்ரிக் பைக் ஷோரூம் ஒன்றில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ கட்டடத்தின் மேலே உள்ள தங்கும் விடுதியில் மளமளவென பரவியதால் முதல் மாடி முழுவதும் புகை மண்டலமானது.
இதில், சிக்கி தீயில் கருகியும், மூச்சு திணறல் ஏற்பட்டும் 7 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து உடனடியாக நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர் .அப்போது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கட்டடத்தின் மேலிருந்து பலர் குதித்தனர்.
அதில் பலர் படுகாயமடைந்தனர். மேலும் பலரை தீயணைப்பு படையினர் கட்டடத்தில் இருந்து மீட்டனர். எலெக்ட்ரிக் பைக் ஷோரூமில் பைக்கின் எஞ்சின் வெடித்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் சென்னையை சேர்ந்த சீதாராமன் (48) என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்றவர்களை அடையாளம் காணும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
எலெக்ட்ரிக் பைக் ஷோரூமில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலியான சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதியாக தலா ரூ2 லட்சம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.