தெலங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டம் அருகே உள்ள நரசம்பேட்டையை சேர்ந்தவர் பிரசாந்த். இவர் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். பிரசாந்த் தன்னுடைய தந்தையின் கிரெடிட் கார்டை வைத்து ஆன்லைன் கேம் விளையாடி இருக்கிறார். ஆன்லைன் கேமில் பணத்தை இழந்ததாகக் கூறப்படுகிறது.
தந்தைக்குத் தெரியாமல் இந்த பணத்தை எப்படியாவது மீட்டுக் கொடுக்க வேண்டும் என நினைத்து தனது நண்பர்களிடம் 2 லட்சம் பணம் வாங்கி அதை வைத்து, மீண்டும் ஆன்லைனில் கேம் விளையாடியுள்ளார். அந்த கேமில் 2 லட்சம் பணத்தையும் இழந்துள்ளார். இதனால் மனவேதனையில் இருந்து வந்த பிரசாந்த் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கடிதம் எழுதி வைத்து விட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து வேலை காரணமாக வெளியில் சென்று வீட்டிற்கு வந்த பெற்றோர், தற்கொலை செய்துகிடந்த மகனைப் பார்த்து அதிர்ச்சியடைந்து கதறி அழுத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் உயிரிழந்த மாணவன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், பிரசாந்த் ஆன்லைனில் கேம் விளையாடி பணத்தை இழந்தது தெரியவந்துள்ளது.
ஆன்லைனில் கேம் விளையாடி பணத்தை இழந்து பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.