சொந்த தொகுதியை கூட கைப்பற்றாத சர்வதேச தலைவர் ராகுல் காந்தி என்று தெலங்கானா மாநில அமைச்சர் கே.டி.ராமராவ் பேசியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் தற்பொழுது தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தி நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது, “தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தேசிய கட்சியை நடத்துவதாக நம்பிக்கொண்டிருக்கிறார். அவர் தேசிய கட்சியை நடத்துவதாக கூட நினைத்துக்கொள்ளலாம்” என கடுமையாக விமர்சித்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக தெலங்கானா மாநில அமைச்சர் கே.டி.ராமராவ் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “சொந்த நாடாளுமன்ற தொகுதியான அமேதியில் கூட வெற்றி பெற முடியாத சர்வதேச தலைவர் ராகுல் காந்தி. தெலங்கானா முதல்வர் கே.சி.ஆரின் தேசிய கட்சியின் லட்சியத்தை கிண்டல் செய்கிறார். பிரதமராக விரும்புவதற்கு முன்பு முதலில் எம்.பி.யாக தேர்வு செய்ய மக்களை சமாதானப்படுத்த வேண்டும்” என ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்துள்ளார்.