தவறான திசையில் வந்த லாரி ஒன்று, வேன் ஒன்றின் மீது மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பெண்கள் உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தெலங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டம் பிட்லம் பகுதியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக எல்லாரெட்டியில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 30 பேர் மினி வேனில் சென்றுக் கொண்டிருந்தனர். ஒருவழி நெடுஞ்சாலையில் வேன் சென்றுக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அதன் எதிரே தவறான திசையில் லாரி அதிவேகத்தில் வந்தது. இதனால் அடுத்து என்ன செய்வது என வேன் டிரைவர் சுதாரிப்பதற்குள்ளாக அவர்களின் வாகனம் மீது லாரி மோதியது.
இந்த கோர விபத்தில் வேன் அப்பளம் போல நொறுங்கி சம்பவ இடத்திலேயே 3 பெண்கள் உயிரிழந்தனர். விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள், காயமடைந்த அனைவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி மேலும் 3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 8-ஆக உயர்ந்தது. 20-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.