இந்தியாவையே உலுக்கிய தெலங்கானா ஆணவக் கொலையில் கைது செய்யப்பட்ட தொழில் அதிபர் மாருதி ராவ் தற்கொலை செய்துகொண்டார்.
2018-ம் ஆண்டு இந்தியாவையே உலுக்கியது தெலங்கானா ஆணவக் கொலை. தெலங்கானா மாவட்டத்தைச் சேர்ந்த பிரணய் குமாரை மணந்தார் அம்ருதா. ஆனால் சாதியைக் காரணம்காட்டி திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் அம்ருதாவின் தந்தையும், தொழில் அதிபருமான மாருதி ராவ்.
இந்நிலையில் கர்ப்பமான தன் மனைவி அம்ருதாவை மருத்துவமனையில் இருந்து அழைத்துக்கொண்டு வெளியே வந்த பிரணய் குமாரை கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் சரமாரியாக வெட்டிக்கொன்றனர்.
அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான இந்த கொடூர காட்சி இந்தியாவையே அதிரச் செய்தது. இந்த கொலையில் ஈடுபட்ட பீகாரைச் சேர்ந்த கூலிப்படையினரையும், அம்ருதாவின் தந்தையையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அம்ருதாவின் தந்தை ஜாமீனில் வெளியே வந்தார்.
பிரணய் குமார் கொலைசெய்யப்பட்டு 4 மாதங்கள் கழித்து அம்ருதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த தெலங்கானா கொலை சம்பவம் நடந்து ஒன்றரை வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் அம்ருதாவின் தந்தை மாருதி ராவ் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள தன்னுடைய பண்ணை வீட்டில் தற்கொலை செய்துகொண்ட மாருதி ராவின் உடலை அவரது வீட்டில் வேலை செய்யும் ஊழியர்கள் கண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தொழில் அதிபர் மாருதி ராவின் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.